பிஹார் கால்நடைத் தீவன ஊழல்: 5-வது வழக்கிலும் லாலு குற்றவாளி!

பிஹார் கால்நடைத் தீவன ஊழல்: 5-வது வழக்கிலும் லாலு குற்றவாளி!
லாலு பிரசாத் யாதவ்

பிஹார் கால்நடைத் தீவன ஊழல் விவகாரத்தில், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றுமொரு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ், 1991 - 1996 இடையே மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கான தீவனங்களை வாங்குவது தொடர்பாக ரூ.950 கோடிக்கு ஊழல் செய்ததாகப் பின்னர் குற்றச்சாட்டுக்கு ஆளானார். சிபிஐ புலனாய்வு மேற்கொண்ட 5 வழக்குகளில், 4 வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனைக்கும் ஆளானார்.

தற்போது 73 வயதாகும் லாலு பிரசாத் யாதவ், தீவன ஊழல் வழக்குகளின் தீர்ப்பால் 2017 முதல் சிறைத் தண்டனைக்கு ஆளாகி உள்ளார். சிறை வளாகத்தைவிட ஜார்க்கண்டில் உள்ள ராஜேந்திர மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், இவர் தங்கி சிகிச்சை பெற்ற காலமே அதிகம். அண்மையில் உடல்நிலை மோசமானதை அடுத்து, டில்லியிலும் தங்கி மருத்துவ சிகிச்சைகளை பெற்றார். உடல்நிலையை காரணமாக்கி தற்போது பிணையில் வெளி வந்திருக்கும் லாலு, மகன் திருமணம் முதல் கட்சிப் பணிகள் கவனித்து வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்ற 5-வது வழக்கிலும் தற்போது லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று(பிப்.15) வெளியான தீர்ப்பின்படி, கால்நடைத் தீவனத்தின் பெயரில் அரசு கருவூலத்திலிருந்து, ரூ.139.35 கோடி மோசடி செய்ததாக, லாலு உட்பட 74 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் லாலுவுக்கு எதிரான தண்டனை விவரம் பிப்.18 அன்று வெளியாக உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனைக்கு லாலு ஆளாகும்பட்சத்தில், அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.