மதுரை அரசு மருத்துமவனை புற்றுநோய் வார்டில் படுக்கைகள் பற்றாக்குறை: தரையில் அமர்ந்து சிகிச்சை பெறும் நோயாளிகள்!

மதுரை இராசாசி அரசு பொது மருத்துவமனை
மதுரை இராசாசி அரசு பொது மருத்துவமனைமதுரை அரசு மருத்துமவனை புற்றுநோய் வார்டில் படுக்கைகள் பற்றாக்குறை: தரையில் அமர்ந்து சிகிச்சை பெறும் நோயாளிகள்!

மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு வார்டில் படுக்கைகள் பற்றாக்குறையால் நோயாளிகள் வரண்டா தரையில் அமர்ந்து சிகிச்சைப்பெறும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 3 ஆயிரம் உள்நோயாளிகள், சுமார் 9 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தென் மாவட்டங்களில் உள்ள மற்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து ஏழை எளிய நோயாளிகள் உயர் சிகிச்சைக்காக இங்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புற்று நோயாளிகளுக்கு தென் தமிழக மக்களின் முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனை திகழ்ந்துவருகிறது. ஓவ்வொரு ஆண்டும் புற்று நோயாளிகள் எண்ணிக்கை அபரிதமாக உயர்ந்துவரும் நிலையில் அதற்கேற்ப படுக்கை எண்ணிக்கை அதிகப்படுத்தாமல் பல ஆண்டாக அதே நிலை நீடித்துவருகிறது.

மருத்துவமனையின் 90வது வார்டின் கீழ் தளத்தில் புற்றுநோய் மருத்துவசிகிச்சைக்கான வெளிநோயாளிகள் பிரிவும், முதல் தளத்தில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்கான உள்நோயாளிகள் பிரிவும் செயல்படுகிறது. படுக்கைகள் பற்றாக்குறையால் இந்த சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள நோயாளிகள் வாரண்டாவில் சிகிச்சைப்பெறும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை சுகாதார செயற்பட்டாளர் வெரோனிகா மேரி கூறியதாவது..., “இப்பிரிவில் சுமார் 35 படுக்கைகள் மட்டுமே உள்ளன. பெண்கள் மற்றும் ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவுகள் மிக அருகில் உள்ளன. ஒவ்வொரு நாளும் 40 லிருந்து 50 பேருக்கு உள் நோயாளிகளாக தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. ஆனால் இங்கே படுக்கைகள் பற்றாகுறை அதிகமாக உள்ளது. சில நேரங்களில் 60க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடிகள் உருவாகின்றன. மாதத்தில் பல நாட்கள் நோயாளிகள் படுக்கை கிடைக்காமல் தரையில் அமரவைக்கப்பட்டு க்ளுக்கோஸ் ஏற்றும் நிலை உள்ளது. சிலர் சுவற்றில் சாய்ந்தவாறும், சிலர் வெறும் தரையில் படுத்துக்கொண்டும் சிகிச்சை பெறுகின்றனர். அறைகள் சிறிய அளவில் இருக்கும் நிலையில் நோயாளிகளுடன் வருபவர்கள் உடனிருப்பதால் நெருக்கடியாக சுகாதாரமற்ற நிலையில் வார்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

பல ஆண்டாகவே புற்றுநோய் வார்டில் இந்த அவல நிலை தொடர்கிறது. பலமுறை வலியுறுத்தியும் நிலைமை மாறவில்லை. பல மாதங்களுக்கு முன்பு இந்த வார்டின் எதிர்புறம் உள்ள சிகிச்சை வார்டு அண்ணா பேருந்து நிலையம் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றிவிட்டு பல் சிகிச்சை வார்டு அமைந்துள்ள இடத்தில் படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பதாக சொன்னார்கள். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அப்படியே உள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் வரும் நோயாளிளுக்கு குறைந்தபட்சம் படுக்கை வசதிகூட அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பிரசவ வார்டு கட்டிடம் போல், புற்றுநோய் உள் நோயாளிகளுக்கென்று பிரத்யேகமாக தனி கட்டிடம் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் 100 எண்ணிக்கைகள் அளவுக்கு படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புற்றுநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் தரையில் அமர்ந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமே இல்லை. இந்த நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கை வசதிகள், 271 வார்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நோயாளிகள் இரண்டு, மூன்று பேர் சேர்ந்து சிகிச்சைக்கு வரும்போது அவர்கள் ஒரே இடத்தில் சிகிச்சைப்பெற விரும்பி இப்படி படுக்கை வசதியில்லாவிட்டாலும் பரவாயில்லை என்று அங்கேயே சிகிச்சைபெற விரும்பி தரையில் அமர்ந்துவிடுகிறார்கள். அவர்களை அங்குள்ள மருத்துவர்கள் கண்டிக்கவும் முடியவில்லை. இனி அவர்கள் அதுபோல் தரையில் அமர்ந்து சிகிச்சைப்பெற அனுமதிக்க மாட்டோம், ’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in