
நீதிபதி தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போது குற்றவாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (23). மில் தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். சிறுமியின் பெற்றோர் செல்வம் குடும்பத்தாரிடம் பேசி திருமணம் செய்து கொள்ள கூறினர். சிறுமியின் பெற்றோரிடம், செல்வத்தின் பெற்றோர் அதிக வரதட்சணை கேட்டனர். இதனால் இரு குடும்பத்தார் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால், மனஉளைச்சல் அடைந்த சிறுமி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமியின் பெற்றோர் புகாரின் அடிப்படையில், வரதட்சணை, சிறுமியிடம் பாலியல் தொல்லை உட்பட 4 பிரிவுகளில் செல்வத்தின் மீது சேத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளி செல்வத்திற்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பை வாசித்து கொண்டிருந்தபோது, குற்றவாளி கூண்டில் நின்ற செல்வம் தான் மறைத்து வைத்திருந்த விஷ விதையை வாயில் போட்டு விழுங்கி மயங்கி விழுந்தார். அங்கு பாதுகாப்பிற்காக நின்ற போலீஸார், செல்வத்தை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.