
திருச்சி அருகே 10ம் வகுப்பு சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மூன்று குழந்தைகளின் தந்தையான கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (43). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், லால்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு முடித்த 16 வயது சிறுமி ஒருவர் தனது குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்கு வந்திருக்கிறார்.
அந்த சிறுமியிடம் பாலசுப்பிரமணியன் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி பழகியுள்ளார். தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி பாலசுப்பிரமணியன் அந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி மூன்று மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். அதையடுத்து பாலசுப்பிரமணியனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சிறுமி வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாலசுப்புரமணியனோ அதிலிருந்து அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் கவலை அடைந்த அந்த சிறுமி பாலசுப்பிரமணியன் குறித்து விசாரித்தபோதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாலசுப்பிரமணியன் திருமணமானவர் என்பதும், அவருக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளது என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சமயபுரம் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார் என சிறுமி புகார் அளித்தார். 16 வயது பெண் பாலியல் வன்கொடுமை என்பதால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்தியாயினி தலைமையிலான போலீஸார் பாலசுப்பிரமணியனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூன்று குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் பத்தாம் வகுப்பு படித்த சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.