கேரளம், ஆந்திரா எல்லைகள் தீவிர கண்காணிப்பு... குரங்கம்மை தடுப்பு தீவிரம்: அமைச்சர் சுப்பிரமணியன் அலர்ட்

கேரளம், ஆந்திரா எல்லைகள் தீவிர கண்காணிப்பு... குரங்கம்மை தடுப்பு தீவிரம்: அமைச்சர் சுப்பிரமணியன் அலர்ட்

தமிழகத்தில் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் குரங்கம்மை நோய்க்கான ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரையில் அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமான நிலையத்தில் குரங்கம்மை பரிசோதனைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "குரங்கம்மை பரவல் குறித்த ஆய்வு முதல்வர் வலியுறுத்தலின் அடிப்படையில் பன்னாட்டு விமானங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கேற்ப தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் முதல் பாதிப்பு ஏற்பட்டபோதே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு அவர்கள் முகத்திலோ அல்லது முழங்கைக்கு அடியிலோ ஏதாவது கொப்பளங்கள் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஐசிஎம்ஆர் விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து வருகிற அத்தனை பயணிகளையும் மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்ப் என்கிற அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ரேண்டமாக 2% ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குரங்கம்மை பல்வேறு நாடுகளில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் 63 நாடுகளில் இருந்து இந்த பாதிப்பு, இந்த வாரம் 72 நாடுகளில் கூடுதலாகி உள்ளது.

உலகம் முழுவதிலும் இந்த 72 நாடுகளில் 14 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரளா, டெல்லி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் அதற்கான பாதிப்பு கூடுதலாகி உள்ளது. எனவே தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும், கேரளா, ஆந்திரா எல்லைகளை கண்காணிப்பதும், எல்லைப் பகுதியில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்து கண்காணிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் நானும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம். இங்கு தினந்தோறும் மூன்று வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன. அதில், ஒவ்வொரு நாளும் 300 முதல் 400 வரை பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கு ரேண்டமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

குரங்கம்மை நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகளின் அறிவுறுத்தலின் படி செயல்பட்டு வருகிறோம். தற்போது, 15 இடங்களில் ஆய்வகங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலிக்கிறது. தமிழகத்தில், சென்னை கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் எடுத்துள்ளோம் அதை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in