
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூவை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் அறிவிக்கை வெளியாகி உள்ளது. இதன்படி மம்தா குமாரி, டெலினா கோங்தூப் மற்றும் குஷ்பூ ஆகியோர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் பெறுகின்றனர்.
இதனையடுத்து ’இத்தகைய பெரும் பொறுப்பினை வழங்கியமைக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு’ குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். பெண்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து உழைப்பேன் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்ட பலரும் குஷ்பூவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ’மகளிர் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வரும் அவருக்கு கிடைத்த அங்கீகாரம்’ என அண்ணாமலை தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் தொடங்கி பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ, சமூக உணர்வுடனும், பெண்கள் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த குஷ்பூ, தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக நியமனம் பெற்றுள்ளார்.