களமிறங்கிய 'கும்கி' சின்னத்தம்பி: சிக்கிய மக்னா காட்டுயானை

கோவை மக்களை மிரட்டிய மக்னா காட்டுயானை
கோவை மக்களை மிரட்டிய மக்னா காட்டுயானைகளமிறங்கிய 'கும்கி' சின்னத்தம்பி: சிக்கிய மக்னா காட்டுயானை

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக அட்டகாசம் செய்த மக்னா காட்டுயானை மயக்க ஊசி போட்டு 'கும்கி' சின்னத்தம்பி யானை மூலம் பிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி 75 கி.மீ தூரம் நடந்து கோவை மதுக்கரை பகுதிக்கு வந்தது. இந்நிலையில், ஒரு வீட்டின் சுற்றுப்புறச் சுவரை நேற்று இடித்து தள்ளியது. அத்துடன் வனத்துறை வாகனத்தையும் சேதப்படுத்தியது.

அங்கிருந்து பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்த மக்னா யானையால் மக்கள் அச்சமடைந்தனர். அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மயக்க ஊசி போட்டு பிடிக்க மருத்துவர்கள் குழுவும் தயாராக இருந்தது.

மதுக்கரை பகுதியில் நேற்று உலா வந்த மக்னா யானை இன்று குனியமுத்தூர் வந்தது. தொடர்ந்து புட்டு விக்கி பாலம், நொய்யல் ஆறு பகுதியில் சுற்றித் திரிந்தது. பின்னர், அங்கிருந்து இடம்பெயர்ந்து பேரூர் பகுதிக்கு சென்ற மக்னா யானை அங்குள்ள தென்னந்தோப்பில் முகாமிட்டது. இதனையடுத்து 'கும்கி' யானை சின்னதம்பி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

யார் இந்த சின்னத்தம்பி?

ஒரு காலத்தில் கோவை மாவட்டப்பகுதியில் உள்ள விளைநிலங்களை அழித்து நாசப்படுத்திய சின்னத்தம்பி வனத்துறையால் பிடிக்கப்பட்டு கோழிக்கழுத்தி வளர்ப்பு முகாமில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டது. கும்கியாக மாறிய பிறகு சின்னதம்பி முதல் முறையாக கோவையில் மக்னாவைப் பிடிக்கும் பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டது. காட்டுயானையைப் பிடிக்கும் தனது முதல் முயற்சியிலேயே சின்னத்தம்பி வெற்றி அடைந்ததால் அதன் பயிற்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in