ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கு: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வேயருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளைரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கு: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வேயருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

லஞ்ச வழக்கில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட சர்வேயருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு சர்வேயராக இருந்தவர் ஸ்டாலின். இவரிடம் வில்லுக்குறியைச் சேர்ந்த ஜோசப்ராஜ்(53) என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்தை பட்டா மாற்றி உட்பிரிவு செய்ய விண்ணப்பித்து இருந்தார். அதற்கு ஸ்டாலின் 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். ஜோசப்ராஜ் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டை ஜோசப்ராஜிடம் கொடுத்தனர். கடந்த 2007-ம் ஆண்டு வில்லுக்குறி விஏஓ அலுவலகத்தில் வைத்து சர்வேயருக்கு ஜோசப்ராஜ் 500 ரூபாயைக் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சர்வேயர் ஸ்டாலினைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு குமரிமாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் தனி நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கடந்த 2016-ம் ஆண்டு சர்வேயர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு எதிராக குமரி லஞ்ச ஒழிப்புப் போலீஸார், மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சர்வேயர் ஸ்டாலினுக்கு ஓருவருடம் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சர்வேயருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in