குமரியில் கடல் சீற்றம்: 3 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்குத் தடை

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்hindu கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் எதிரொலியாக குமரி மாவட்ட மீனவர்கள் மூன்றுநாள்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வருகிறது. இதனால் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இன்று தொடங்கி அடுத்த மூன்றுநாள்களுக்கு குமரி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்தத் தகவல் மீனவ கிராமங்களில் உள்ள பங்கு தந்தைகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் மீனவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 48 மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதேபோல் ஏற்கனவே கடல் தொழிலுக்குச் சென்றிருந்தவர்களுகும் இதுகுறித்துத் தகவல் கொடுத்ததன் பேரில் அவர்களும் அவசரமாகக் கரை திரும்பினர். இதனிடையே குமரிக்கடல் இன்று கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் கடலின் உள்பகுதியில் நின்று புகைப்படம் எடுக்கத் தடைபோட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in