மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்
மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்

குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரியை நாளை நெருங்கும் என்பதால் குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதனால் குமரி கடலில் 45 முதல் 65 கிலோமீட்டர் வேகம் வரையில் காற்றுவீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், நாளை சுனாமி நினைவு தினம் என்பதாலும் குமரி மீனவர்கள் பொதுவாகவே இன்று கடல் தொழிலுக்குச் செல்வதில்லை.

இருந்தும் குமரி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே மீன் பிடிக்கச் சென்றவர்கள் யாரேனும் ஆழ்கடலில் இருந்தால் அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் மீன்வளத்துறையினர் மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும், பங்குத் தந்தைகளுக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னமுட்டம், தேங்காய்பட்டினம், குளச்சல் ஆகிய மீன்பிடித்துறைமுகங்களில் விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்லமழையும் பெய்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in