`காரில் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்டவை இருந்துள்ளன’- கோவை ஆணையர் அதிர்ச்சித் தகவல்!

`காரில் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்டவை இருந்துள்ளன’- கோவை ஆணையர் அதிர்ச்சித் தகவல்!

கோவையில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த மாருதி கார் வெடித்துச் சிதறியதில், அந்த வாகனத்தை ஓட்டிவந்த உக்கடம் பகுதியை சேர்ந்த முபின் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தடயவியல் வல்லுநர்கள், மோப்ப நாய் என அறிவியல் பூர்வமான விசாரணையைத் தொடங்கி இறந்த நபரை அடையாளப்படுத்தினோம். அந்த வாகனம் 10 கைகள் மாறிமாறி கொண்டுவரப்பட்டதைக் கண்டுபிடித்தோம். அன்று மாலைக்குள்ளாக கார் எங்கிருந்து வந்தது என்பதையும், இறந்து போன நபர் யார் என்பதையும் கண்டுபிடித்து அவரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நேற்று 5 நபர்களைக் கைது செய்துள்ளோம். மேலும் உபா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில் சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும், அவர்களின் வீடுகளை சோதனை செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

காவல் அதிகாரிகள் அருகில் உள்ள வீட்டிலிருந்ததால் மாருதி கார் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்திருக்கக் கூடும் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. அந்த காரில் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த கூட்டுச்சதியில் யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கெல்லாம் தொடர்பு இருக்கிறது எனத் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டுள்ள  ஒரு சில நபர்களிடம் 2019-ல் தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்துள்ளது. அப்போது அவர்கள் சொன்ன தகவல்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கை உள்ளிட்டவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிசிடிவி காட்சிகளை வைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in