`சுவாதியை சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார்; தவறான தகவல் அளிப்பவர் தப்ப முடியாது'- நீதிபதிகள் அதிரடி

`சுவாதியை சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார்; தவறான தகவல் அளிப்பவர் தப்ப முடியாது'- நீதிபதிகள் அதிரடி

"சுவாதியை சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார். சத்தியப் பிரமாணம் செய்த பின் தவறான தகவலை அளிப்பவர் எளிதாக கடந்து சென்று விட முடியாது" என்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறினர்.

நாமக்கல் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 25-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுவாதி ஆஜரானார். அப்போது, பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து, சுவாதியை வரும் 30-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம், அன்றைய தினம் சுவாதி ஆஜராக வேண்டும். அப்போதும் இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதிகள், "சுவாதி உண்மையை சொல்லாமல் மறுத்துவிட்டார். சிசிடி உள்ள பெண் அவராக இருந்தும் அதனை ஏற்காமல் சுவாதி மறுத்துவிட்டார். சுவாதி யாராலும் அழுத்தத்திற்கு ஆளாகி யாரையோ காப்பாற்ற இவ்வாறு கூறுகிறாரோ என நினைக்கிறோம்.

சாட்சிகள் உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சத்தியப்பிரமாணம் பெறப்படுகிறது. சுவாதியின் சாட்சி இந்த வழக்கில் முக்கியம். அவரே சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார். சத்தியப் பிரமாணம் செய்த பின் தவறான தகவலை அளிப்பவர் எளிதாக கடந்து சென்று விட முடியாது. நீதித்துறையை மாசுபடாமல் இருக்க தவறான தகவலை தருவோர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். பிறழ் சாட்சியான சுவாதி அதற்கான காரணத்தையாவது குறிப்பிட்டு இருக்க வேண்டும்'' என்ற கருத்து கூறியதோடு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், அன்றைய தினம் சுவாதியை ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in