கோஹினூர் வைரம் ஒடிசா ஜெகன்னாத் கோயிலுக்குச் சொந்தம்: திரும்பக் கொண்டுவர ஜனாதிபதிக்கு மனு!

கோஹினூர் வைரம் ஒடிசா ஜெகன்னாத் கோயிலுக்குச் சொந்தம்: திரும்பக் கொண்டுவர ஜனாதிபதிக்கு மனு!

கோஹினூர் வைரம் ஒடிசாவில் உள்ள ஜெகன்னாத் கோயிலுக்கு சொந்தமானது என்று கூறி, பிரிட்டனில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க வைரத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர ஜனாதிபதி திரௌபதி முர்மு தலையிட வேண்டும் என பூரியைச் சேர்ந்த ஸ்ரீ ஜெகன்னாத் சேனா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் தற்போது மன்னராகியுள்ளார். விதிமுறைகளின்படி, 105 காரட் கோஹினூர் வைரம் அவரது மனைவியான ராணி கார்ன்வால் டச்சஸ் கமிலாவுக்குச் சொந்தமாகும்.

இந்த நிலையில் கோஹினூர் வைரத்தை 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூரி ஜெகன்னாத் கோயிலுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, ஸ்ரீ ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளது. அந்த மனுவில், "கோஹினூர் வைரம் ஸ்ரீ ஜெகநாத் பகவானுடையது. அது இப்போது இங்கிலாந்து ராணியிடம் உள்ளது. மகாராஜா ரஞ்சித் சிங் தனது விருப்பத்தின் பேரில் அதை ஜகன்னாத் கடவுளுக்கு நன்கொடையாக வழங்கினார். எனவே அதை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நமது பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன்," என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியா தர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராணிக்கு கடிதம் அனுப்பிய பின்னர், அக்டோபர் 19, 2016 அன்று பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து தனக்கு ஒரு கடிதம் வந்ததாக ப்ரியா தர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார், அதில் "இது தொடர்பாக இங்கிலாந்து அரசாங்கத்திடம் நேரடியாக முறையிடவேண்டும்” என்று கேட்டுக் கொண்டது. அந்தக் கடிதத்தின் நகல் ஜனாதிபதிக்கான மனுவில் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வரலாற்று ஆசிரியரும், ஆய்வாளருமான அனில் திர், “பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானின் நாதிர் ஷாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிறகு பூரி இறைவனுக்கு கோஹினூர் வைரத்தை நன்கொடையாக அளித்தார். ஆனால், உடனடியாக அவர் ஒப்படைக்கவில்லை. ரஞ்சித் சிங் 1839 ல் இறந்தார், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் கோஹினூர் வைரத்தை அவரது மகன் துலீப் சிங்கிடம் இருந்து எடுத்துச் சென்றனர், இருப்பினும் அது பூரியில் உள்ள ஜெகநாதருக்கு உயில் அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “மகாராஜா ரஞ்சித் சிங்கின் வாரிசுகள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பல உரிமைகோரல்கள் இருந்தாலும் ஜெகன்னாத் சேனாவின் கூற்று நியாயமானது. மகாராஜா ரஞ்சித் சிங் இறப்பதற்கு முன், அவர் கோஹினூர் வைரம் பூரி ஜகன்னாதருக்கு நன்கொடையாக அளித்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆவணம் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியால் சான்றளிக்கப்பட்டது, அதற்கான ஆதாரம் டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளது" என்று கூறினார்.

ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினர் பூபிந்தர் சிங், வைரத்தை திரும்பக் கொண்டுவருவது குறித்த பிரச்சினையை 2016 ம் ஆண்டு ராஜ்யசபாவில் எழுப்பினார். அதன்பின்னரும் பல அரசியல் கட்சிகள் கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டுவர குரல் கொடுத்து வருகின்றன.

பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் துலீப் சிங் 13 வயதுடையவராக இருந்தபோது, ஆங்கிலேயப் படைகளிடம் தோற்றார். அதன்பின்னர் அப்போதைய இங்கிலாந்து ராணியிடம் 1850 ம் ஆண்டுவாக்கில் கோஹினூர் வைரத்தை துலீப் சிங் ஒப்படைத்தார். ஆனால் ஆங்கிலேயப் படைகள் இந்த வைரத்தை திருடியதாகவும், துலீப் சிங்கிடம் இருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.

200 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான மதிப்பினைக் கொண்டிருக்கும் இந்த வைரமானது ஆங்கிலேய ஆட்சியாளர்களால் திருடப்பட்டதோ அல்லது பலவந்தமாக எடுக்கப்பட்டதோ இல்லை, பஞ்சாபின் முன்னாள் ஆட்சியாளர்களால் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது என்பது உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது.

உலகின் மிக விலையுயர்ந்த வைரங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோஹினூர் வைரம் 14 ம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் ராணி உயிரிழந்த பின்னர் சமூக வலைதளங்களிலும் கோஹினூர் வைரத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சுழலில் பூரி ஜெகன்னாத் கோயிலுக்கு வைரத்தை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்று ஒடிசாவில் உள்ள அமைப்புகள் கோரிக்கை வைப்பதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in