கொடைக்கானலில் அடுத்தடுத்து நிலச்சரிவு: தொடர்மழையால் சீரமைப்பு பணிகளுக்கு சிக்கல்

அடுக்கம் சாலையில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவு
அடுக்கம் சாலையில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மற்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாய்க்கால்கள், குளங்கள், அணைகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் செல்லக்கூடிய அடுக்கம் சாலையில் குருடிகாடு என்று பகுதியில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு தற்போது வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானல், தாண்டிக்குடி - வத்தலக்குண்டு சாலையில் பட்டலங்காடு பகுதியில் இன்று காலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, பட்டலங்காடு பிரிவு வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால், மீதமுள்ள 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை வைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக இந்த இரண்டு நிலச்சரிவு சம்பவத்தின் போதும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும், இன்று காலை முதல் மழை சற்று குறைந்த போதிலும் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இப்ப பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். மேலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சாலைகளில் வாகனங்கள் செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in