இன்றைய சமகால கலைகளுக்காக உலகளவில் நடக்கும் ’வெனீஸ் பினாலே’ உலக அளவில் பிரசித்திப் பெற்றது. அதே போன்று, கேரள மாநிலம் கொச்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 'கொச்சி முசிறீஸ் பினாலே' எனும் கலை விழா நடத்தப்பட்டு வருகிறது.
சேர நாட்டின் பாரம்பரியமிக்க துறைமுகமான முசிறியை நினைவுகூரும் வண்ணம் முசிறீஸ் எனும் பெயரை கலை விழாவின் பெயரில் இணைத்திருக்கிறார்கள். கொச்சி பினாலே பவுண்டேசன் நடத்தும் இந்த விழாவானது தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கலைச் சங்கமம் ஆகும். இந்நிகழ்வு இன்று தொடங்குவது கலைஞர்களை உற்சாகமூட்டியுள்ளது.
2022 - 23 ஆண்டிற்கான பினாலே இன்று தொடங்கி 2023 ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. இதற்காக போர்ட் கொச்சி மற்றும் மட்டாஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள 14 பாரம்பரிய கட்டிடங்கள் கலைக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 கலைஞர்களின் படைப்புகளும் கலைத் தொகுப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஓவியம் மற்றும் சிற்பக் கலையை விட நிறுவகக் கலைக்கே பினாலேயில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒலி - ஒளி காட்சிகளும் இடம் பெறுகின்றன.
பாலஸ்தீன், துருக்கி, லெபனான், எகிப்து, கென்யா, ஆப்ரிக்கா, சிலே, மலேசியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புகள் இடம் பெறுகின்றன. திபெத் மற்றும் நேபாள கலைத் தொகுப்புகளும், சென்னை பினாலே புகைப்படத் தொகுப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கலைக் கூடங்களை பார்வையிட நபர் ஒன்றிற்கு 150 ரூபாயும், மாணவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் திங்கள்கிழமை தோறும் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர். முப்பது கோடி ரூபாய் செலவில் நடைபெறும் இந்த விழாவிற்கு கேரள அரசு ஏழு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறது. பினாலே வளாகத்தில் தினமும் இரவு உலகத் திரைப்படம் மற்றும் ஆவணப்படம் திரையிடல், கலை மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், நிகழ்த்துக் கலைகள், இசை நிகழ்சிகளும் நடைபெறுகின்றன.
கொச்சி பினாலேயின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள கவின்கலை கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ' மாணவர் பினாலே' நடைபெறுகிறது. கடந்த முறை நடைபெற்ற மாணவர் பினாலேயில் சென்னை அரசு கவின்கலை கல்லூரி மாணவர்களின் கலைத் தொகுப்பு முதல் பரிசை வென்றது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள கலைஞர்கள் கேரளத்தின், கொச்சியில் முகாமிட்டுள்ளனர்.