`பல் தேய்க்காமல் முத்தம் ஏன் கொடுத்தீங்க'- கண்டித்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

அவினாஸ்_தீபிகா
அவினாஸ்_தீபிகா

பல் தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததை கண்டித்த மனைவியை, கணவர் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஸ். இவருக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த தீபிகா என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் ஐவின் என்ற மகன் உள்ளார். பெங்களூருவில் பணி செய்துவந்த அவினாஸ், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தான் குடும்பத்தோடு மன்னார்காடு வந்தார்.

நேற்று காலையில் தூங்கி எழுந்ததும், அவினாஸ் தன் மகன் ஐவினின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளர். இதைப் பார்த்த தீபிகா, பல் தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்காதீர்கள் எனக் கண்டித்துள்ளார். இதற்கு சம்மதிக்காத அவினாஸ், என் குழந்தைக்கு நான் முத்தம் கொடுப்பேன் என மீண்டும் முத்தம் கொடுக்கவே தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற அவினாஸ் கத்தியால் மனைவி தீபிகாவை சரமாரியாகக் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அக்கம், பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து தீபிகாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கழுத்து, கை, கால் என சரமாரியாக விழுந்த கத்திக்குத்தால் அதிகளவு ரத்தம் வெளியேறி தீபிகா இறந்துவிட்டார்.

பல்தேய்க்காமல் முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன மனைவியை, கணவரே குத்திக்கொலை செய்த சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில், அவினாஸ் கடந்த சில மாதங்களாக மனச்சிதைவுக்கு உள்ளாகி இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வழக்கில் இருந்து தப்பவே அவினாஸ்க்கு மனச்சிதைவு ஏற்பட்டதாகக் கூறப்படுவதாக பாலக்காட்டை சேர்ந்த பெண்ணிய செயல்பாட்டாளரும், வழக்கறிஞருமான நீது குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in