கிரோரி சிங் பைன்ஸ்லா: குஜ்ஜர் இடஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தவர்!

கிரோரி சிங் பைன்ஸ்லா: குஜ்ஜர் இடஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தவர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் இன மக்களின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடிய கிரோரி சிங் பைன்ஸ்லா (81) காலமானார். நீண்டகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த அவர், இன்று ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானதாக அவரது மகன் விஜய் பைன்ஸ்லா தெரிவித்திருக்கிறார்.

1940 செப்டம்பர் 12-ல், ராஜஸ்தானின் கரோலி மாவட்டத்தில் உள்ள முண்டியா எனும் கிராமத்தில் பிறந்தவர் கிரோரி சிங். படிப்பை முடித்த பின்னர் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். எனினும், தனது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதால், அந்த ஆர்வத்தில் அவரும் ராணுவத்தில் சேர்ந்தார். ராஜபுதன ரைஃபிள்ஸ் படையில் சேர்ந்து கர்னலாக உயர்ந்த அவர், 1962-ல் நடந்த இந்திய - சீனப் போரிலும், 1962-ல் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரிலும் பங்கேற்றார்.

குஜ்ஜர் இன மக்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்னெடுத்தவராக அறியப்படும் கிரோரி சிங், இந்தக் கோரிக்கையை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியவர்.

2007-ல் அவர் தலைமையில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2008-ல் அவர் நடத்திய போராட்டத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள். உயிரிழப்புகளுக்குப் போலீஸார்தான் பொறுப்பு என அவர் குற்றம்சாட்டினார்.

2018 அக்டோபரில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை, 21 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்தியது ராஜஸ்தான் அரசு. 2018 டிசம்பரில் குஜ்ஜர்களுக்கும், 4 பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் 1 சதவீத இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு வழங்கியது. இப்படியாக, 50 சதவீத இடஒதுக்கீட்டில், 1 சதவீத தனி ஒதுக்கீட்டை குஜ்ஜர் சமூக மக்கள் பெற்றனர். எனினும், குஜ்ஜர் இன மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி 2019-ல் ரயில் மறிப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார் கிரோரி சிங். தொடர்ந்து 9 நாட்கள் நடந்த போராட்டத்தின் விளைவாக, கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் 5 சதவீத இடஒதுக்கீடு குஜ்ஜர் இன மக்களுக்குக் கிடைத்தது. 2020-ல் அவர் நடத்திய போராட்டத்தின் விளைவாக, குஜ்ஜர் இன மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.

2019-ல் கிரோரி சிங்கும் அவரது மகன் விஜய்யும் பாஜகவில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in