பெண்ணை டூவீலரில் கடத்திச் சென்று பலாத்காரம்: ரவுடி உள்பட இருவர் கைது

பெண்ணை டூவீலரில் கடத்திச் சென்று பலாத்காரம்: ரவுடி உள்பட இருவர் கைது

தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ரவுடி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், மாநகரப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த முருகன் என்ற கட்டை முருகன்(27), அழகேசபுரத்தைச் சேர்ந்த கோகுல் ராம்(19) ஆகியோர் அந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி வழிமறித்தனர். கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை டூவீலரில் ஏற்றிக்கொண்டு தருவைக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் முருகன் என்ற கட்டை முருகன் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதன் பின் அந்தப் பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுள்ளார். இதைப் பார்த்த கோகுல் ராம், அந்த பெண்ணின் செல்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தன் ஆசைக்கு இணங்குமாறும், இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கட்டை முருகனையும், கோகுல் ராமையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டிருக்கும் முருகன் மீது, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு என 16 வழக்குகளும், சிப்காட், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி காவல்நிலையத்தில் தலா ஒரு வழக்கும் உள்ளது.

முன்னதாக இவ்வழக்கில் முருகன் தேடப்பட்டு வந்தார். அப்போது தாளமுத்து நகர் பகுதியில் ஒருவரை அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்துவிட்டு டூவீலரில் தப்பினார். அப்போது அவரை தனிப்படை போலீஸார் துரத்தினர். இதனால் முருகன் டூவீலரில் இருந்து கீழே விழுந்ததில் அவரது கை ஒடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in