திருமண ஆசைவார்த்தையை நம்பிச் சென்ற மாணவி: கடத்திச் சென்ற வாலிபர் போக்சோவில் சிக்கினார்!

திருமண ஆசைவார்த்தையை நம்பிச் சென்ற மாணவி: கடத்திச் சென்ற வாலிபர் போக்சோவில் சிக்கினார்!

விருத்தாசலத்தில் பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச்சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 28-ம் தேதியன்று திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை கண்டுபிடித்து தரக்கோரி விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கணக்கு இருந்ததை கண்டறிந்த போலீஸார் அதனை கண்காணித்ததில் திருவாரூர் மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அஜித்குமார்(23) என்பவருடன் அவர் நெருக்கமாக பழகி வந்ததை கண்டறிந்தனர். அத்துடன் இருவரும் அலைபேசியில் அதிக நேரம் பேசியிருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி விருத்தாசலம் வந்த அஜித்குமார் மாணவியை சந்தித்து இருவரும் திருமணம் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அவரது ஆசை வார்த்தைகளால் ஏமாந்த மாணவி அவருடன் புறப்பட்டு சென்றுள்ளது உறுதியானது. அதனையடுத்து நேற்று திருவாரூர் சென்ற போலீஸார் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், அவருடன் இருந்த சிறுமியை மீட்டு அழைத்து வந்து விருத்தாசலத்தில் உள்ள அரசுக் காப்பகத்தில் நேற்று இரவு ஒப்படைத்தனர். அஜித்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in