சக வீரர் தலையில் தாக்கினார்; கிக்பாக்ஸிங் வீரர் திடீர் மரணம்: சென்னை போட்டியில் சோகம்

சக வீரர் தலையில் தாக்கினார்; கிக்பாக்ஸிங் வீரர் திடீர் மரணம்: சென்னை போட்டியில் சோகம்

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்ற அருணாச்சல மாநில வீரர் காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த கிக்பாக்ஸிங் வீரர் யோராடாடோ(24) என்பவரும் கலந்து கொண்டார். இறுதி நாளன்று நடைபெற்ற போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர் யோராடாடோ மகாராஷ்டிரா மாநில வீரர் கேஷவ்முடேல்(21) என்பவரை எதிர்கொண்டார். அப்போது எதிர் அணி வீரர் கேஷவ் தாக்கியதில் யோராடாடோ தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு கிக்பாக்ஸிங் அசோசியேசன் நிர்வாகி சுரேஷ்பாபு உடனே பெரியமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் அங்கு வந்த போலீஸார் காயமடைந்த வீரர் யோராடாடோவை மீட்டு சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்துவிட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு மருத்துவர்கள் கிக்பாக்ஸிங் வீரர் யோராடாடோவுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் ஆபத்தான நிலையில் ஐசியூ வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த யோராடாடோ நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த வீரரின் உடலை அவரது சொந்த ஊரான அருணாசல பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.

தேசிய அளவிலான போட்டியில கலந்து கொண்ட கிக்பாக்ஸிங் வீரர் காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in