விற்பனையில் கலக்கும் கதர் ஆணையம்: பிரதமர் மோடியும் ஒரு காரணம்!

விற்பனையில் கலக்கும் கதர் ஆணையம்: பிரதமர் மோடியும் ஒரு காரணம்!

கதர்-கிராம கைத்தொழில் ஆணையம் (கேவிஐசி) 2021-22 நிதியாண்டில் 1,15,415 கோடி ரூபாய் மதிப்புக்கு விற்றுமுதல் செய்து சாதனை படைத்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல. இந்தியாவில் விரைந்து விற்பனையாகும் நுகர்பொருள் பண்ட நிறுவனங்கள் (எஃப்எம்சிஜி) எதனாலும் சாதிக்க முடியாததை கதர் ஆணையம் சாதித்துள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் விற்றுமுதலை பிற நுகர்பொருள் விற்பனை நிலையங்களால் எட்டவே முடியவில்லை. 2020-21 நிதியாண்டில் 95,741 கோடி ரூபாய் மதிப்புக்கு கதர் ஆணையம் விற்றுமுதல் செய்திருந்தது.

2020-21 முதல் கதர் ஆணையம் 20.54 சதவீத வளர்ச்சி கண்டது. 2014-15 முதல் கதர்-கிராம கைத்தொழில் துறைப் பிரிவின் வளர்ச்சி 2021-22 வரையில் 172 சதவீதம் வளர்ந்து வந்திருக்கிறது. ஒட்டுமொத்த விற்பனை 248 சதவீதத்துக்கும் மேல் போனது.

2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையில் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது பரவல் காரணமாக நாட்டில் பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், இப்படி உற்பத்தியும் விற்பனையும் பெருகியிருப்பது கதர் பொருட்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருப்பதைக் காட்டுகிறது.

கதர் துறையில் மட்டும் 2020-21-ல் 3,528 கோடி ரூபாயாக இருந்த விற்றுமுதல் 43.20 சதவீத வளர்ச்சி கண்டு 2021-22-ல் 5,052 கோடி ரூபாயாக உயர்ந்தது. டெல்லியின் கனாட் பிளேஸ் என்ற பகுதியில் உள்ள கதர் விற்பனை மையம் 2021 அக்டோபர் 30-ம் நாளில் மட்டும் 1.29 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து ஒரு நாள் விற்பனையில் புதிய சாதனையை எட்டியது.

சாதனைக்குக் காரணம்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிகழ்ச்சிகளில் கதர், கிராமத் தொழில் ஆணையப் பொருள்களை வாங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். அவரே கதர் ஆடைகளையும் பொருட்களையும் வாங்குகிறார். விற்பனைக் கூடங்களுக்குச் சென்று புதிய படைப்புகளையும் தயாரிப்புகளையும் பார்வையிட்டு ஊக்குவிக்கிறார். ரயில் நிலையங்கள், விமான நிலைய விற்பனையகங்களில் பொருட்கள் நன்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. அரசியல் இயக்கங்களும் தொண்டு நிறுவனங்களும் கதர் தயாரிப்புகளைப் பரிசாக அளிக்க நிறைய வாங்குகின்றன. பள்ளி – கல்லூரி மாணவர்களும் உயர் நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் இல்லத்தரசிகளும் கதர் பொருட்களை வாங்குவதற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வாங்குகின்றனர். கதர் – கிராம கைத்தொழில் விற்பனையகங்களின் ஊழியர்களும் பிற நுகர்வோர் பொருள் விற்பனையகங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கான சேவையின் தரத்தை அதிகரித்து வருகின்றனர்.

இந்தக் காரணங்களால் கதர் விற்பனை அதிகரித்து வருகிறது என்கிறார் கேவிஐசி தலைவர் வினய்குமார் சக்ஸேனா. அத்துடன் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிய சுதேசி உணர்வும், கிராம மக்களை ஆதரிக்க வேண்டும் என்ற பரிவும் கதர் பொருட்களின் விற்பனைக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருந்தொற்று காரணமாக வேலைவாய்ப்பும் வருவாயும் இழந்த பலருக்கு கதர் – கிராமத் தொழில் ஆணையம் இரண்டையும் வழங்கி வருகிறது. இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு, கதர் – கிராம கைத்தொழில் ஆணையத்தை நாடி உதவி பெறுகின்றனர். பிரதமர் பெயரிலான வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் இதற்கு உதவியாக இருக்கிறது.

Related Stories

No stories found.