சைக்கிளில் குக்கிராமங்களுக்கு சென்றவர்: கேரளத்தின் முதல் பெண் தபால்காரர் மரணம்!

சைக்கிளில் குக்கிராமங்களுக்கு சென்றவர்: கேரளத்தின் முதல் பெண் தபால்காரர் மரணம்!

கேரளத்தின் முதல் பெண் தபால்காரர் ஆனந்தவள்ளி(89) வயோதிகத்தின் காரணமாக உயிரிழந்தார். கேரளத்தின் குக்கிராம வீதிகளில் சைக்கிளுடன் சென்று தபால்களை சேர்ந்த முதல் பெண் இவர்தான்!

பெண்கள் தபால்துறையில் போஸ்ட்மேனாக வலம்வருவது இன்று சர்வசாதாரணமான ஒன்றுதான். ஆனால் 1950 களில் தன் இருபது வயதில் சைக்கிளில் போய் தபால்களை, இல்லங்களில் சேர்க்கும் வேலையைச் செய்தவர் ஆனந்தவள்ளி. ஆலப்புழா மாவட்டத்தின் முஹம்மா அலுவலகத்தில் வேலை செய்த ஆனந்தவள்ளி, கடந்த 1991-ம் ஆண்டு பணி ஓய்வுப் பெற்றார்.

ஆனந்தவள்ளியின் மகன் தன்ராஜ் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “நான் புகைப்படக் கலைஞராக உள்ளேன். என்னுடைய சிறுவயதில் மாத்ருபூமியில் அம்மாவைப்பற்றிக் கட்டுரை வந்தது. அப்போது எனக்கு அதன் மதிப்புத் தெரியவில்லை. நான் வளர்ந்து புகைப்படக் கலைஞர் ஆனதும், பத்திரிகைகளோடு நெருக்கம் வந்தது. அதன்பின்னரே பெண்களுக்கு ஏற்ற பணி அல்ல என எண்ணப்பட்ட சூழலை அம்மா உடைத்திருப்பது தெரியவந்தது. அம்மா முதன்முதலில் ஓட்டிய ராலே சைக்கிளை இப்போதும் பாதுகாத்து வருகிறோம்.

அம்மாவுக்கு பணிகிடைத்த அன்றே 20 வயது பெண் எப்படி வீடு, வீடாக அலைந்து தபால் கொடுப்பார்? அது எப்படி சாத்தியம்? அவரது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என 1950களின் மன ஓட்டத்திலேயே அம்மாவுக்கு சஞ்சலத்தைக் கொடுத்தார்கள். இதனால் அம்மா முதல்நாள் பணிக்கு சென்றபோதே ராஜினாமா கடிதத்துடனே சென்றார். ஆனால் ஸ்டெனோகிராபர் தான் அதை கிழித்து எறிந்து ஊக்கம் கொடுத்தார். என் தாத்தா கே.ஆர்.ராகவன் ஆயுர்வேத மருத்துவர். அவர்தான் அம்மாவை ஊக்கப்படுத்தினார். அம்மா தபால்களை டெலிவரி செய்யும் ராலே சைக்கிளைக்கூட அவரே வாங்கித்தந்தார். அம்மா முதல் மாதத்தில் 97.50 ரூபாய் சம்பளம் வாங்கியதை எப்போதும் நெகிழ்ச்சியுடன் சொல்வார்” என்றார்.

கேரளத்தின் முதல் பெண் தபால்காரர் ஆனந்தவள்ளி தன் 89-ம் அகவையில் வயோதிகத்தின் காரணமாக நேற்று உயிர் இழந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in