டோல்கேட்டை உடைத்து பாய்ந்த கார்... சிசிடிவியில் சிக்கிய கஞ்சா கும்பல்: கேரள இளைஞர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது சென்னை போலீஸ்

டோல்கேட்டை உடைத்து பாய்ந்த கார்... சிசிடிவியில் சிக்கிய கஞ்சா கும்பல்: கேரள இளைஞர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது சென்னை போலீஸ்

சென்னையில் சுங்கச்சாவடியை உடைத்துக் கொண்டு காரில் சென்ற கஞ்சா கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 65 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சினிமாபட பாணியில் போலீஸாரின் காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த 24-ம் தேதி காரனோடை சுங்கச்சாவடி அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றபோது கார் நிற்காமல் சுங்கச்சாவடி கேட்டை உடைத்து கொண்டு போலீஸாரின் காரை இடித்து விட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

உடனே போலீஸார் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அதிவேகமாக சென்ற கார் வண்டலூர் நெடுஞ்சாலை அருகே கேட்பாரற்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கேட்பாரற்று நின்றிருந்த காரை சோதனையிட்டபோது 65 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் காரை ஓட்டிச்சென்றவர் குறித்து விசாரணை நடத்தி திருவனந்தபுரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சாவை கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்ட நபர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in