திறந்துவிட்ட தமிழகம்... பிடியை இறுக்கும் கேரளம்!

கட்டுக்குள் வருமா கரோனா?
கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கையோடு, ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஞாயிறு பொதுமுடக்கமும், இரவுநேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆனால், கேரளமோ தன் பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்கி கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது; அந்தக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தும் விதத்திலும் கவனிக்க வைக்கிறது.

கேரளத்தில் ஜனவரி 23-ம் தேதியில் இருந்துதான் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. மாவட்ட வாரியாக ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திவந்த கட்சி மாநாடுகளை ரத்து செய்துள்ளனர். கூடவே, தங்கள் கட்சியின் தொண்டர்கள் பட்டியலைச் சேகரித்து ஒவ்வொரு ஊரிலும் பலரது இல்லங்களுக்குக் கொடுத்துள்ளனர்.

இணை நோய் உள்ளவர்கள், புற்றுநோயாளிகள் ஆகியோருக்குத் தடையின்றி மருந்து, மாத்திரைகள் கிடைப்பதை அந்தந்த ஏரியா கமிட்டியின் தோழர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும், வயோதிகர்களின் மருத்துவத் தேவைக்கு உதவ வேண்டும் என்றும் இடதுசாரித் தோழர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகளை உள்ளடக்கி ‘வார் ரூம்’ அமைத்து, கரோனா கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

கரோனா கட்டுப்பாடுகளைக் கேரளத்தின் 16 மாவட்டங்களிலும் புகுத்திவிடவில்லை. கரோனா தொற்றுப்பரவல் அதிகம் இருக்கும் பகுதிகளைத் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ, பி, சி என வகைப்படுத்தியுள்ளது. இதில் கூடுதல் பாதிப்பு இருக்கும் பகுதிகளில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் உள்ளிட்ட பரவல் வீரியத்துடன் இருக்கும் பகுதிகளில் கடந்த வாரம் முதலே திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. இன்னும்கூட திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 பேரும், இறப்பு நிகழ்வுகளுக்கு 20 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதை கேரள சுகாதாரத் துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பொதுமுடக்கத்தையும், மாநிலத்தின் எதிர்காலத்தையும் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையும் கேரளத்தின் பலம். கரோனா முதல் இரு அலைகளின்போதும், பொதுமுடக்கத்தின்போதும்கூட 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நேரடித் தேர்வுகளாகவே நடத்தியது ஓர் உதாரணம்.

கேரளத்தின் இப்போதைய கரோனா சூழல் குறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும் கேரளத்தில் தினசரி கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் அதிகமாகவே உள்ளது. தேசிய குறியீட்டு அளவோடு ஒப்பிடுகையில் இது குறைவுதான். மக்கள் லேசான அறிகுறி தெரிந்தாலே தொற்றுப் பரிசோதனைக்குத் தங்களை ஆட்படுத்திக்கொள்கின்றனர். அதனால் நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆனாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது” என்றார்.

இத்தனைக்கும் முதல்வர் பினராயி விஜயன், தற்சமயம் நாட்டிலேயே இல்லை. தனது உடல்நல சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். எனினும், அவரது அறிவுறுத்தல்படியே ஊரடங்கு கட்டுப்பாடுகள் கட்டுக்கோப்புடன் அமல்படுத்தப்படுகின்றன.

தமிழகம் அறிவித்திருக்கும் தளர்வுகள் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கான வாசல்தான். ஆனாலும் அந்த வாசல் வழியாகப் பாதுகாப்பாகப் பயணிக்க முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in