`நிம்மதி இழந்து தவிக்கிறேன்; நள்ளிரவில்தான் வீடு வருகிறேன்'- 25 கோடி பரிசு விழுந்த கேரள வாலிபர் வேதனை

`நிம்மதி இழந்து தவிக்கிறேன்; நள்ளிரவில்தான் வீடு வருகிறேன்'- 25 கோடி பரிசு விழுந்த கேரள வாலிபர் வேதனை

பணம் கேட்டு பலர் தன்னுடைய வீட்டிற்கு வருவதாகவும் இதனால் என்னுடைய நிம்மதியே போய்விட்டது என்றும் 25 கோடி பரிசு விழுந்த கேரள வாலிபர் வேதனை தெரிவித்துள்ளார்.

கேரள அரசு இந்தாண்டு ஓணம் பம்பர் டிக்கெட்டின் முதல் பரிசாக 25 கோடி வழங்கப்படும் என அறிவித்தது. ஒரு லாட்டரி சீட்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் லாட்டரி குலுக்கல் கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறை அலுவலகத்தில் நடந்தது. அதில், TJ 750605 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது. அந்த, லாட்டரி சீட்டை வாங்கியது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பது தெரியவந்தது.

இந்த லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியிருக்கிறார் அனூப். வரி பிடித்தம் போக கேரளா அரசு அவருக்கு 15.75 கோடியை வழங்கியது. 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வெளிநாடு சென்று குடும்பத்தை காப்பாற்ற நிலையில் இந்த லாட்டரி பரிசுத் தொகையால் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்தார் அனூப். வீடு ஒன்று கட்டப்போவதாகவும், ஹோட்டல் வைத்து குடும்பத்தை காப்பாற்றப் போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னால் முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு உதவுவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தான் நிம்மதி இழந்து தவிப்பதாக அனூப் வேதனை தெரிவித்துள்ளார். மருத்துவச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க என ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூறி தனது வீட்டு முன் குவிந்து வருவதாகவும், திரைப்படம் தயாரிக்க சிலர் தன்னை நாடி வருவதாகவும் அனூப் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் தனது குழந்தையைகூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நள்ளிரவில்தான் வீட்டிற்கு வருவதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார் அனூப்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in