நாய் கடித்ததால் தாக்கியது ரேபிஸ்... பறிபோனது உயிர்: கேரள மாணவிக்கு கோவையில் நிகழ்ந்த சோகம்!

நாய் கடித்ததால் தாக்கியது ரேபிஸ்... பறிபோனது உயிர்: கேரள மாணவிக்கு கோவையில் நிகழ்ந்த சோகம்!

கேரளத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீலெட்சுமி, கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அங்கே எதிர்பாராத விதமாக நாய்கடிக்கு ஆளானவர், அதனால் ரேபிஸ் நோய் தாக்கப்பட்டு ஒரு மாதச் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்திருக்கிறார்.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலெட்சுமி (18). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ம் தேதி கல்லூரிக்குச் செல்லும் வழியில் நாய் ஒன்று இவரைக் கடித்தது. உடனே ரேபிஸ் தடுப்பு மருந்தையும் எடுத்துக் கொண்டார் ஸ்ரீலெட்சுமி. அதன் பின்னர் எந்த அறிகுறியும் இல்லாததால் இயல்பாகவே இருந்தார்.

இந்நிலையில் திடீரென ஸ்ரீலெட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மங்காராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். அவருக்குத் தொடர் காய்ச்சல், நாய்கடித்த இடத்தில் வலி, வாந்தி உள்ளிட்ட ரேபிஸ் நோயின் அறிகுறிகள் இருந்தன. நோய் உறுதி செய்யப்பட்டதால் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீலெட்சுமி உயிர் இழந்தார்.

ஸ்ரீலெட்சுமியைக் கடித்த நாய், அதற்கு ஒருநாள் முன்பே அதை வளர்க்கும் உரிமையாளரைக் கடித்தது. ஆனால், அவருக்கு எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. ரேபிஸ் நோயைப் பொறுத்தவரை நாய் கடித்த 90 நாள்கள் வரை அறிகுறிகளைக் காட்டும் தன்மையுடையது என்பதால் அவரும் மருத்துவக் கண்காணிப்பிலேயே இருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம், கேரளத்தில் காசர்கோடு பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனை நாய் கடித்தது. உடனே ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்திய நிலையில் மூன்று வாரங்கள் கழித்து அவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in