நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச் சொன்ன விவகாரம்: 5 பேர் அதிரடியாக கைது

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச் சொன்ன விவகாரம்: 5 பேர் அதிரடியாக கைது

கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வுக்குச் சென்ற தன் மகளை உள்ளாடையைக் கழற்ற சொன்னதாக தந்தை ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் கேரள மாநிலம், கொல்லத்தில் மார்த்தோமா கல்வி நிறுவனத்தில் தேர்வெழுதச் சென்ற மாணவிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது பீப் சத்தம் கேட்டது. தங்களது உள்ளாடையில் இருக்கும் உலோகக் கொக்கியில் இருந்து அந்த சத்தம் வருகிறது என்று மாணவிகள் விளக்கிச் சொன்னார்கள். ஆனாலும், அனைத்து மாணவிகளின் உள்ளாடைகளும் கழட்ட நிபந்திக்கப்பட்டனர். மாணவிகள் உள்ளாடையைக் கழட்டிய பின்பு தான் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கோபக்குமார், கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் போலீஸிற்கு அளித்திருந்த புகாரில், “தேசிய தேர்வு முகமையின் வழிகாட்டுதல்படி உள்ளாடைகளில் உலோகக் கொக்கிக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவர்கள் மாணவிகளின் உள்ளாடையை அகற்றச் சொன்னார்கள். அங்கு இருந்த அனைத்து மாணவிகளும் இந்தச் சிக்கலை எதிர்கொண்டனர். இதனால் என் மகளால் சரியாகத் தேர்வுகூட எழுதமுடியவில்லை. மாணவிகள் அனைவரும் தங்கள் உள்ளாடைகளை ஒரே அறையில் கொட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இதில் கரோனா விதிமுறைகள்கூட பின்பற்றப்படவில்லை.

நீட்டிற்கான வழிகாட்டுதலில் பெரிய பட்டன் கொண்ட ஆடைகளை மட்டுமே தடை செய்கிறது. ஆனால் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றச் சொன்னது அதிர்ச்சியளிக்கிறது. ஹாலுக்குள் நுழைய மெட்டல் டிடெக்டர் வழியாக என் மகள் நுழைந்தபோது பீப் சத்தம் கேட்டுத்தான், உலோகம் இருப்பதாகச் சொல்லி உள்ளாடையை அகற்றச் சொன்னார்கள். இந்த ஒரு மையத்தில் மட்டும் தான் இந்தப் பிரச்சினை இருந்தது”என்று புகார் கொடுத்திருந்தார்.

கோபகுமார் கொடுத்த புகாரின்பேரில் சடையமங்கலம் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டத்தின் 354, 509 வது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் இவ்விஷயத்தை கையில் எடுத்து விசாரணை நடத்திவருகிறது.

இதனிடையே சம்பந்தப்பட்ட மார்த்தோ கல்வி நிறுவனம்," இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீட் தேர்வை நடத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தான் பதில்சொல்ல வேண்டும்" என்று விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் மாணவிகளின் உள்ளாடைகளை கழட்டச் சொல்லி நிர்பந்தித்ததாக தேசிய தேர்வு முகமையால் தேர்வு நடத்த நியமிக்கப்பட்ட மூவர், மார்த்தோ கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் என 5 பேரை கோலீஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக இச்சம்பவத்தைக் கண்டித்து கேரளத்தில் கொல்லத்தில் நேற்று மாலை மாணவர் அமைப்புகள் போராட்டத்தையும் முன்னெடுத்தன. இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நீடிக்க உள்ளதால் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே மத்திய கல்வி அமைச்சகமும் இதுகுறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக்குழுவும் கொல்லம் விரைந்துள்ளது. இந்தக்குழுவின் முடிவின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in