கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அனத்தலாவட்டம் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 86.
இவர் 1950களில் மாணவராக இருக்கும்போதே பொதுப்பணியைத் தொடங்கியவர். கயிறு தொழிலாளர்கள் அமைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்த அனத்தலாவட்டம் ஆனந்தன், 1957-ல் திருவிதாங்கூர் தென்னை நார் தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரானார்.
1960 முதல் 1971 வரை திருவிதாங்கூர் தென்னை நார் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். 1971 முதல் கேரள தென்னை நார் தொழிலாளர் மையத்தின் (சிஐடியு) அலுவலகப் பொறுப்பாளராக இருந்து வந்தார்.
1971-ம் ஆண்டு சிபிஎம் திருவனந்தபுரம் மாவட்டக் குழு உறுப்பினரான அவர், மிசா அவசரச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தார். பின்னர் 1985-ல் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினராகவும், பின்னர் மாநிலச் செயலக உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
1987-ம் ஆண்டில் அட்டிங்கல் தொகுதியில் இருந்து முதன்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1996, 2006-ம் ஆண்டுகளிலும் அதே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
சிஐடியுவின் மாநிலத் தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் இருந்து வந்த அனத்தலாவட்டம் ஆனந்தன் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார்.