
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரளா நம்பர் லாட்டரி விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்து முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. பட்டபகலில் கூட்டம் கூட்டமாக கூலி தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் குவிந்து முண்டியடித்துக் கொண்டு லாட்டரி வாங்கிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவலறிந்த சேலையூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்துக் கொண்டிருந்துள்ளது. ஒரு சிறிய அறையில் 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களை அப்படியே மடக்கி பிடித்த போலீஸார், அவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த துரைப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ்(28) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக விற்பனை செய்த மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.