நீயா நானா... பெயர் வைப்பதில் கணவன், மனைவி மோதல்- 4 வயது குழந்தைக்கு பெயர் சூட்டிய கேரள உயர்நீதிமன்றம்

கேரள உயர்நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம்

கேரள மாநிலத்தில், பெயர் வைப்பதில் பெற்றோரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 4 வயது வரை பெயர் வைக்காத குழந்தைக்கு கேரள உயர்நீதிமன்றம் பெயர் சூட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலம் ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த பாலகங்காதரன் மற்றும் பிரியா ஆகியோருக்கு இடையே திருமணம் நடைபெற்று கடந்த நான்கு வருடங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு முன்பே இருவருக்கும் இடையே கருத்கு வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இருவரும் குழந்தைக்கு பெயர் வைப்பதில் பிடிவாதம் காட்டத் துவங்கினர். கணவர் கூறும் பெயர் மனைவிக்கு பிடிக்காமலும், மனைவி கூறும் பெயர் கணவனுக்கு பிடிக்காமலும் இருந்ததால், நான்கு வயது வரை குழந்தைக்கு பெயர் வைக்கப்படவில்லை. இதனிடைய பிரியா குழந்தையுடன் தனது தாயாரின் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வாங்கிய போதும் அதில் அவர் பெயரை குறிப்பிடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக பிரியா சென்றபோது, பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாததால், பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

ஆலுவா நகரம்
ஆலுவா நகரம்

இதை தொடர்ந்து மகளின் பெயரை பதிவு செய்வதற்காக ஆலுவா பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போதும், கணவன், மனைவி இருவரும் நேரில் வந்தால் மட்டுமே குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியும் என பதிவாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பிரியா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய மகளுக்கு புண்யா நாயர் என்று பெயர் சூட்ட விரும்புவதாகவும், அதற்கு சம்மதிக்க தன்னுடைய கணவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தனது மகளுக்கு பத்மா நாயர் என்று பெயரிட வேண்டுமென பாலகங்காதரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருவரும் ஆலுவா நகர சபை செயலாளர் முன்பு ஆஜராகி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இந்த பிரச்சினையில் உரிய தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து பிரியா, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

ஆலுவா பதிவாளர் அலுவலகம்
ஆலுவா பதிவாளர் அலுவலகம்

இந்த மனு நீதிபதி பெச்சு கொரியன் தாமஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி குழந்தைக்கு நீதிமன்றமே பெயர் வைக்கும் என உத்தரவிட்டார். தன்னுடைய உத்தரவில், ”குழந்தைக்கு சமூகத்தில் பெயர் என்பது முக்கியமானதாகும். குழந்தைகளை பாதுகாக்கும் ’பேரன்ட்ஸ் பேட்ரியா’ என்ற சட்டத்தை பயன்படுத்தி குழந்தைக்கு நீதிமன்றமே பெயர் வைக்க தீர்மானித்துள்ளது. தாயின் பாதுகாப்பில் உள்ள குழந்தைக்கு தாய் தெரிவித்துள்ள பெயரையும் அதன் பின்னால் தந்தை பெயரையும் சேர்த்து புண்யா பாலகங்காதரன் நாயர் அல்லது புண்யா பி நாயர் என்று குழந்தைக்கு பெயர் வைக்கப்படுகிறது. இந்த பெயரை பதிவாளர் அலுவலகத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். பதிவாளர் இந்த பெயரை ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையின் பெயரை பதிவு செய்யும்போது கணவன், மனைவி இருவரும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. யாராவது ஒருவர் சென்றால் போதும்” என தீர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடால் நான்கு வயது வரை பெண் குழந்தைக்கு பெயர் வைக்காமல் இருந்து, நீதிமன்றமே பெயர் வைத்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in