மெஸ்ஸி ரசிகருக்கும் - எம்பாப்பே ரசிகைக்கும் டும்டும்..

தொடரும் சேட்டன்களின் அட்ராசிடி
மெஸ்ஸி ரசிகருக்கும் - எம்பாப்பே ரசிகைக்கும் டும்டும்..

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நிறைவுற்று 2 நாட்களாகின்றன. ஆனால் கால்பந்து ரசிகர்களால் அதன் எதிரொலிகளில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை. கால்பந்து ஆட்டத்தில் பித்தான இருவர் கேரளாவில் கைத்தலம் பற்றியிருக்கும் தகவலும் இதில் சேரும்.

இந்தியாவில் கால்பந்து ரசிகர்களை அதிகம் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில், இன்னமும் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களை ரசித்து வருகிறார்கள். அதையொட்டிய ரசிகர்களின் மோதல்கள் மற்றும் கொண்டாட்டங்கள் தொடர்ந்தும் வருகின்றன. அதிலும் சேட்டன்களின் அட்ராசிடி ஒருபடி மேலே இருக்கிறது. அதற்கு சிறிய உதாரணம், சச்சின் - ஆதிரா ஜோடி.

கத்தார் உலகக்கோப்பை கால்பந்துக்கான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் ஞாயிறு அன்று மோதின. அன்றைய தினம் சச்சின் - ஆதிரா இடையிலான திருமண வைபவமும் அரங்கேறியது. கால்பந்து ரசிகர்களான இருவரும் மனமொத்து வாழ்க்கையில் இணைந்தபோதும், ஒரு விடயத்தில் நுணுக்கமாக வேறுபட்டிருந்தனர்.

மணமகன் சச்சின், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸின் விசிறி. மணமகள் ஆதிராவோ, பிரான்ஸ் வீரர் எம்பாப்பே ரசிகை. இந்த தீவிர கால்பந்து பித்தர்கள் இருவரும் தத்தம் விளையாட்டு நட்சத்திரங்களை கொண்டாடும் விதமாக மணமேடையில் வீற்றிருந்தனர். மெஸ்ஸி அணியும் அர்ஜென்டினா ஜெர்ஸியை சச்சின் அணிந்திருந்தார். அதேபோல எம்பாப்பே ஜெர்ஸியை ஆதிரா அணிந்திருந்தார்.

பட்டு சட்டை மற்றும் பட்டு சேலைகளுக்கு மேலாக இந்த ஜெர்ஸிகளை அணிந்து மாலை மாற்றிய இவர்களின் திருமண வைபவம் கொச்சியில் நடைபெற்றது. திருமணம் முடிந்த சூட்டில் இருவரும் அரக்கப்பரக்க தங்கள் வசிப்பிடமான திருவனந்தபுரத்துக்கு விரைந்தனர். சுமார் 220 கிமீ அப்பாலிருக்கும் திருவனந்தபுரத்தில் புதுமண ஜோடிகளுக்கான முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது.

அது சாந்தி முகூர்த்தமல்ல; கால்பந்து முகூர்த்தம். மணமக்கள் தத்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் புடைசூழ அர்ஜென்டினா - பிரான்ஸ் இடையிலான இறுதிப்போட்டியை கண்டுகளித்தனர். போட்டியின் இறுதியில் சச்சின் - ஆதிரா ஜோடிக்கு பரிசும் காத்திருந்தது. சச்சினின் ஆதர்ச நாயகனான மெஸ்ஸி போட்டியின் சிறந்த வீரராக தேர்வானார். ஆதிராவின் விருப்பத்துக்குரிய எம்பாப்பேக்கு தங்கக் காலணி கிடைத்தது.

இவற்றை தங்கள் திருமணத்துக்கு கிடைத்த பெரும் பரிசாக கொண்டாடும் இந்த இளம் சோடி, அந்த கொண்டாட்டத்தின் அங்கமாக தற்போது தங்கள் மணவிழா புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். கால்பந்து காய்ச்சல் தணியாத ரசிகர்கள் மத்தியில் அவை வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in