ஜப்பான் முறையில் 3 சென்ட் நிலத்தில் 400 மரங்கள்: கேரள விவசாயி சாதனை

ஜப்பான் முறையில் 3 சென்ட் நிலத்தில் 400 மரங்கள்:  கேரள விவசாயி சாதனை
மியாவாகி முறையில் ஹரி வளர்த்த காடு. ஹரி, அகிரா மியாவாகி (இடது புறம்)

கேரளா தலைநகரம் திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள புளியரக்கோணத்தில், மூன்றே சென்ட் நிலப்பரப்பில் 400 மரங்களை வளர்த்து வருகிறார் விவசாயி ஹரி.

மேலும் பல செடிகளையும் கொடிகளையும் வளர்த்து பசுமை பொங்க வைத்திருக்கிறார். ஜப்பானியரான அகிரா மியாவாகியின் நுட்பத்தைக் கையாண்டு, வறண்ட பகுதியைப் பசுஞ்சோலையாக்கிவிட்டார். மியாவாகி முறையில் செடிகள் 10 மடங்கு வேகத்தில், 30 மடங்கு அடர்த்தியில் வளர்ந்துவிடும்.

இதன் மூலம், குறைந்த அளவு நிலம் வைத்திருப்பவர்கள் கூட புவி வெப்பமடைவதைத் தடுக்க சிறப்பாக உதவ முடியும். அதே வழிமுறையை ஹரி கையாண்டு, இந்த மரங்களை வெறும் ஒன்றரை ஆண்டுகளில் வளர்த்திருக்கிறார்.

மண் வளம் சரியில்லை. தண்ணீர் போதவில்லை. இருந்தாலும் ஆழ்துளைக் கிணறு தோண்டினால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிடும் என்பதால் அதைத் தவிர்த்தார்.

கோட்டயத்தைச் சேர்ந்தவர் ஹரி. தொழில் செய்வதற்காக திருவனந்தபுரத்துக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தார். அப்படி வரும்போது அங்கேயிருந்த நிலங்களை விற்றுவிட்டார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு நிலங்களை விற்றதும், விவசாயத்தைவிட்டு விலகியிருப்பதும் பெரிய இழப்பாகவே மன வருத்தமளித்தது. எனவே, திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியில் தன்னிடமிருந்த பணத்துக்கு 2 ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த இடம் விவசாயத்துக்கு உகந்ததல்ல என்பதே பலருடைய ஆலோசனை.

இருந்தாலும் தன்னுடைய நிலங்களில் ஏதாவதொரு மர வகையைத் தொடர்ந்து நட்டு வந்தார். ஒன்றுமே வளரவுமில்லை, பிழைக்கவுமில்லை. கோடைக்காலத்தில் எல்லா செடிகளும் மரக் கன்றுகளும் வாடி உதிர்ந்துவிடும்.

மண் வளம் சரியில்லை. தண்ணீர் போதவில்லை. இருந்தாலும் ஆழ்துளைக் கிணறு தோண்டினால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிடும் என்பதால், அதைத் தவிர்த்தார். மரங்களைக் காக்க அதையும் முயன்று பார்த்தார். அப்போதும் மரங்கள் வளரவில்லை. கேரளத்தில் மரங்களை நட்டு வளர்க்க முடியவில்லை என்றால், பருவநிலை மாறுதலின் தீய விளைவுக்கு வேறு சான்றே தேவையில்லை என்று வருந்தினார்.

அவர் வாங்கிய நிலத்தில் ஒரு குட்டை இருந்தது. அந்தத் தண்ணீர் மரங்களை வளர்க்க உதவும் என்று நம்பினார். அந்தக் குட்டையை மேலும் ஆழப்படுத்தி, தூர் வாரியபோது மேலுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. இருந்த தண்ணீரும் மண்ணிலிருந்த நுண்துளைகள் வழியாக எங்கோ ஓடி மறைந்தன. 500 மரக் கன்றுகளை நட்டால் அதில் 50 பிழைத்தன. அதுவும் பூத்தவுடன் தண்ணீரில்லாமல் வறண்டு வாடி மரித்தன. ஹரியின் மனம் சோர்ந்தது.

வெவ்வேறு வகை மரங்களை அருகருகே நடும்போது ஒவ்வொன்றுக்குமாக உருவாகும் பூச்சிகள் இன்னொரு மரத்தின் பூச்சிகளைச் சாப்பிட்டுவிடும். இதனால் எல்லா பூச்சிகளும்போய் மரங்கள் தப்பித்துவிடும்.

அப்போதுதான் அவருடைய விஞ்ஞானி நண்பர் டாக்டர் மேத்யூ டேன், ”நீ ஏன் மியாவாகி முறையில் மரங்களை வளர்க்கக் கூடாது!” என்று தூண்டினார். அந்த முறை என்ன என்று அவரிடமே கேட்டார். அவர் சொன்ன உடனேயே அதைத் தொடங்காமல் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதில் ஆராய்ச்சிகளையும் பரிசோதனைகளையும் செய்துபார்த்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் தனது மொத்த நிலத்தில் 3 சென்ட் நிலத்தை மட்டும் மியாவாக்கி வகை குறுங்காட்டுக்கு ஒதுக்கினார். 400 மரக் கன்றுகளை நெருக்கமாக நட்டார். அவை ஒன்றோடு ஒன்று சூரிய ஒளிக்காகப் போட்டிப் போட்டுக்கொண்டு வேகமாகவும் திண்மையாகவும் வளர்ந்தன. அங்கே மரங்கள், புதர்கள், கொடிகள், செடிகள் என்று தாவரம் எல்லா வடிவங்களிலும் நெருங்கி வளர்ந்துள்ளன. வழக்கமாக கேரளத்தில் வளரும் 70 வித மரக் கன்றுகளுடன் வேறு 200 வகைகளையும் சேர்த்துப் பயிரிட்டார்.

ஒரே வகை மரக்கன்றுகளை நட்டால் அதன் இலைகளையும் தண்டுகளையும் உண்ணும் பூச்சிகள் உருவாகி, அவற்றைச் சாப்பிட்டு முடித்துவிடும். வெவ்வேறு வகை மரங்களை அருகருகே நடும்போது, ஒவ்வொன்றுக்குமாக உருவாகும் பூச்சிகள் இன்னொரு மரத்தின் பூச்சிகளைச் சாப்பிட்டுவிடும். இதனால் எல்லா பூச்சிகளும்போய் மரங்கள் தப்பித்துவிடும்.

இளம் தேங்காயின் ஓடுகள், தேங்காய் நார், பசுஞ்சாணம், உமி போன்றவற்றை மரம் வளர்க்கும் இடத்தில் உள்ள மண்ணின் மீது இட்டு மேல் பூச்சாக சுண்ணாம்பையும் இடுகிறார். இவை மண்ணுக்கு உரம் ஊட்டுவதுடன் தண்ணீரை அதிக நேரம் தன்னிடம் வைத்திருந்து, செடிக்கும் மரக் கன்றுக்கும் ஈரத்தை வழங்குகின்றன.

மண்ணின் சாரம், ஈரம், சூரிய ஒளி மூன்றும் இவற்றிலிருந்து கிடைக்கவும் செடிகள் போட்டிபோட்டு வளர்கின்றன. அவர் வளர்க்கும் மரக் கன்றுகளுக்கு அருகில் காளான்கள் வளர்ந்திருப்பதைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, குழந்தை போல குதூகலிக்கிறார். ‘காளான்கள் வளர்கின்றன என்றால், மண்ணில் எல்லா சத்துகளும் இருக்கின்றன என்று அர்த்தம்’ என்கிறார். கேரளத்தவருக்கு மட்டுமல்ல பிற மாநிலத்தவருக்கும் ஹரி ஒரு பசுமை முன்னோடி.

Related Stories

No stories found.