
பழநியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கேரள தம்பதி எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அதில், தங்கள் தற்கொலைக்கு 10 பேர் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பல்லுரித்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராம்(46). இவரது மனைவி உஷா(44). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலுக்கு ரகுராம், உஷா தம்பதியர் வந்துள்ளனர். கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு பழநி அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அதன் பிறகு நேற்று மாலை 5 மணியாகியும் அவர்கள் இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், பழநி அடிவாரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரகுராம், உஷா இருவருடம் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது உடல்களைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அறையில் இருந்த அவர்களது உடமைகளைச் சோதனையிட்டனர். அப்போது போலீஸாரிடம் ஒரு கடிதம் சிக்கியது. அதில், " சிறிய விஷயத்திற்காக 10 பேர் கொண்ட கும்பல், தங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றதாகவும், இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தங்கள் தற்கொலைக்கு இந்த 10 பேர் தான் காரணம் என்றும், கேரளாவில் உள்ள பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இக்கடிதத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழநியில் கேரள தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.