கேரளா குண்டுவெடிப்பு… அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு!

முதல்வர் பினராயி விஜயன்.
முதல்வர் பினராயி விஜயன்.

கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி, களமசேரியில் உள்ள ஒரு அரங்கத்தில் யெகோவா கிறிஸ்தவ சபையின் 3 நாள் ஜெபக்கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று கடைசி நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை சுமார் 9 மணிக்கு ஜெபக்கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கே இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் திடீரென அரங்கத்தின் உள்ள மேடைக்கு அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. மொத்தம் 3 முறை இந்த குண்டு வெடித்தது. இதனால் அரங்கத்தில் இருந்த நாற்காலிகள் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடத் தொடங்கினர். இந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரளா குண்டு வெடிப்பு
கேரளா குண்டு வெடிப்பு

இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கொச்சி களமசேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக கூறி இளைஞர் ஒருவர் போலீஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு உள்பட மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் மாநில பாதுகாப்பு குறித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in