குஜராத் செல்லும் கேஜ்ரிவால் - சிசோடியா: தேர்தல் களத்தில் ஓர் அதிரடிப் பயணம்!

குஜராத் செல்லும் கேஜ்ரிவால் - சிசோடியா: தேர்தல் களத்தில் ஓர் அதிரடிப் பயணம்!

கலால் கொள்கை முறைகேடு புகார்களின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகளின் வளையத்துக்குள் வந்திருக்கும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று குஜராத் செல்கிறார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் அவருடன் செல்கிறார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தியிருக்கின்றனர். அவ்ர் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக அவரும் அர்விந்த் கேஜ்ரிவாலும் குஜராத் செல்கின்றனர். இன்று காலை அகமதாபாத் செல்லும் இருவரும், ஹிம்மத்நகரில் நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். நாளை பாவ்நகரில் நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்திலும் பங்கேற்கவிருக்கின்றனர்.

இது தொடர்பாக, ஆகஸ்ட் 20-ல் ட்வீட் செய்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், ‘கல்விக்கும் சுகாதாரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க நானும் மணீஷ் ஜியும் குஜராத் செல்கிறோம். டெல்லியைப் போலவே குஜராத்துக்கும் சிறந்த பள்ளிகள், மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகள் கிடைக்கவிருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வியும் சிகிச்சையும் இலவசமாகக் கிடைக்கவிருக்கின்றன. இதனால் அம்மாநில மக்கள் நிம்மதியடைவார்கள்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். குஜராத் மாநில இளைஞர்களுடன் உரையாடவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி, பஞ்சாபைத் தாண்டி குஜராத்திலும் வெற்றிபெற ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டிருக்கிறது. கடந்த மாதம் குஜராத் சென்றிருந்த அர்விந்த் கேஜ்ரிவால், இலவச மின்சாரம், சுகாதார வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in