பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

கோவை குண்டு வெடிப்பு எதிரொலியாக பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சென்னையில் மீண்டும் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகியவை வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பியது. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேர் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை போலீஸார் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in