கேசிஆர் வெற்றிக்கு வியூகம் வகுக்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

பிரசாந்த் கிஷோர் - கேசிஆர் சந்திப்பில் பிரகாஷ் ராஜ் இடம்பெற்ற பின்னணி என்ன?
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறது முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி.

இந்தச் சூழலில், தேர்தல் வியூக வகுப்பாளரும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அரியணையில் ஏற்றி அரசியல் களத்தையே மாற்றியமைத்தவருமான பிரசாந்த் கிஷோர், சந்திரசேகர் ராவைச் சந்தித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வார இறுதியில் ஹைதராபாதில் உள்ள சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டக் கட்டுமானப் பணிகளையும் பிரசாந்த் கிஷோர் பார்வையிட்டிருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அணிதிரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் சந்திரசேகர் ராவைப் பிரசாந்த் கிஷோர் சந்தித்தது அரசியல் ரீதியிலான எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. ஏற்கெனவே தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா முதல்வ்ர் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா முதல்வ்ர் சந்திரசேகர் ராவ்

பாஜகவுக்கு எதிரான அணிக்கு அச்சாரமா?

2014 மக்களவைத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு வியூகம் வகுத்துத் தந்ததன் மூலம் கவனம் ஈர்த்த பிரசாந்த் கிஷோர், பின்னர் கேப்டன் அமரீந்தர் சிங், அர்விந்த் கேஜ்ரிவால், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் போன்றோரின் வெற்றிக்குச் சூத்திரம் அமைத்துத் தந்தவர்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனான ஒப்பந்தம் தொடரும் நிலையிலும், அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாரை அவர் சந்தித்துப் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா போன்றோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் சந்திரசேகர் ராவ். இப்படியான அரசியல் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தைப் பார்வையிடும் பிரசாந்த் கிஷோருடன் பிரகாஷ் ராஜ்...
காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தைப் பார்வையிடும் பிரசாந்த் கிஷோருடன் பிரகாஷ் ராஜ்...

தேசிய அரசியலில் பிரகாஷ் ராஜ்?

காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டக் கட்டுமானப் பணியைப் பார்வையிட பிரசாந்த் கிஷோர் சென்றபோது, அவருடன் நடிகர் பிரகாஷ் ராஜும் சென்றிருந்தது இன்னொரு ஆச்சரியம். பாஜகவின் தீவிர எதிர்ப்பாளரான பிரகாஷ் ராஜ், 2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கி தோல்வியைச் சந்தித்தவர். சந்திரசேகர் ராவின் மும்பை பயணத்தின்போது அவருடன் சென்ற பிரகாஷ் ராஜ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் போன்ற தலைவர்களுடனான சந்திரசேகர் ராவின் சந்திப்பில் உடன் இருந்தார்.

இதையடுத்து, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக பிரகாஷ் ராஜ் முன்னிறுத்தப்படுவார் எனப் பேச்சுகள் எழுந்தன. தேசிய அரசியலில் களம் காணும் முனைப்பில் இருக்கும் பிரகாஷ் ராஜ், விரைவில் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in