பெண்களை மிரட்டி பணம் பறித்தவர்; 2 ஆண்டுகளாக காத்திருந்த போலீஸ்: ஏர்போர்ட்டில் சிக்கினார் காசியின் நண்பர்!

பெண்களை மிரட்டி பணம் பறித்தவர்; 2 ஆண்டுகளாக காத்திருந்த போலீஸ்: ஏர்போர்ட்டில் சிக்கினார் காசியின் நண்பர்!

வெளிநாட்டில் இருந்ததால் கைது செய்யப்படாமல் இருந்த நாகர்கோவிலை சேர்ந்த காசியின் நண்பரை, போலீஸார் பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இதன்மூலம் காசி வழக்கு மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

நாகர்கோவில் கோட்டாறு கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். கறிக்கோழிக் கடை வைத்திருந்தார். இவரது மகன் காசி(28). இவர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர், நாகர்கோவிலைசேர்ந்த பள்ளி மாணவி உள்பட ஏராளமான பெண்கள் தங்களுடன் நெருக்கமாகப் பழகி, ஆபாசப்படம் எடுத்து மிரட்டியதாக புகார் கொடுத்தனர். இதனிடையே காசி மீது கந்துவட்டி வழக்கும் பதிவானது. அவர் மீது கந்துவட்டி, போக்சோ உள்பட 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காசிக்கு உதவும்வகையில் தடயங்களை அழித்த காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். காசியும், தங்கபாண்டியனும் இப்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர். இந்த வழக்குகளில் பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக காசியின் நண்பர் கவுதம்(29) சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் கவுதம் வெளிநாட்டில் இருந்ததால் சிபிசிஐடி போலீஸாரால் அவரைக் கைது செய்யமுடியவில்லை. இதனால் அவர் எப்போது இந்தியா வந்தாலும் கைது செய்ய முன் எச்சரிக்கையாக கவுதமின் புகைப்படம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு நேற்று இரவு கவுதம் வந்திருப்பதாக சிபிசிஜடி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கவுதமைக் கைது செய்தனர். இவ்வழக்கில் கவுதம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in