காஷ்மீர் பண்டிட்கள் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, சகோதரர் படுகாயம்!

காஷ்மீர் பண்டிட்கள் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, சகோதரர் படுகாயம்!

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் படுகாயமடைந்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், கடந்த அக்டோபரிலிருந்து காஷ்மீரில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிறார்கள் பயங்கரவாதிகள். குறிப்பாக, காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ராகுல் பட், பள்ளி முதல்வர் சுபீந்தர் கவுர், ஆசிரியர் தீபக் சந்த், ஆசிரியை ரஜ்னி பாலா, காவலர் அஜய் தார், ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் எனப் பலர் அடுத்தடுத்து பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படுகொலைகள் அதிகரித்ததால், காஷ்மீரில் பணிபுரியும் பண்டிட்கள் உள்ளிட்ட இந்துக்கள் ஜம்முவுக்குத் தங்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரினர். பீதியடைந்த காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறியதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபோன்ற சம்பவங்களுக்குப் பயந்து அரசு ஊழியர்களைப் பணியிட மாற்றல் செய்வது அநாவசியம் என்று காஷ்மீர் அரசு நிர்வாகம் கருதியதாகவும் கூறப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த காஷ்மீர் பண்டிட்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மீண்டும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலில் உயிரிழந்தவரின் பெயர் சுனில் குமார் என்றும் காயமடைந்த அவரது சகோகரின் பெயர் பின்டு குமார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

“ஷோபியான் மாவட்டத்தின் சோட்டிபோரா பகுதியில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். இருவரும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். அந்தப் பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது’ என ட்வீட் செய்திருக்கும் காஷ்மீர் காவல் துறை, இதுதொடர்பான விரிவான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in