கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவுக்கு திடீர் உடல்நலக்குறைவு... காவேரி மருத்துவமனையில் அனுமதி!


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனுக்கு உடல்நலக்குறைவு...மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனுக்கு உடல்நலக்குறைவு...மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், அவரின் மூத்த மனைவி பத்மாவதிக்கும் பிறந்தவர் மு.க முத்து(வயது 75). தொடக்க காலத்தில் இவர் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக திரையுலகில் களமிறங்கி, அவரைப் போலவே நடை, உடை, பாவனைகளோடு நடித்தார். அவர் நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’, ‘பூக்காரி’, ‘சமையல்காரன்’, ‘அணையா விளக்கு’, ‘நம்பிக்கை நட்சத்திரம்’ போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறாத காரணத்தால், திரையுலகில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.

தனது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனித்து வசித்து வந்த மு.க.முத்து, அரசியலிலிருந்தும் விலகியே இருந்தார். ஒரு கட்டத்தில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரை சந்தித்த மு.க முத்து, தனது வறுமை நிலைப் பற்றி கூறினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஜெயலலிதா உதவினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு சில காலமாக மு.க முத்து எங்கே இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மு.க முத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். மீண்டும் இப்போது வயது மூப்பு காரணமாக மு.க முத்துவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க முத்துவுக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in