கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 7-ம் தேதி நடக்கிறது; திமுக தலைமை அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி
முன்னாள் முதல்வர் கருணாநிதி

ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்க இருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூறாவது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் ஓர் ஆண்டு முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனி இலட்சினையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை சென்னை புளியந்தோப்பு பகுதியில் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சி தலைவர்களும், அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பல மாநிலங்களை சேர்ந்த 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நாடு முழுவதும் துக்கமான சூழல் நிலவியது. இதையடுத்து தமிழக அரசு நேற்று நடத்த இருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. திமுக தலைமை சார்பில் நடத்த இருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ரத்து செய்யப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் எதிர்வரும் 7-ம் தேதி, சென்னை புளியந்தோப்பில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in