கோமியம் கொண்டு குடிநீர் தொட்டி ‘சுத்திகரிப்பு’: பட்டியல் இனத்தவர் தொட்டதால் ‘தீட்டு’ ஆனதாம்

’இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா?’
கோமியம் கொண்டு குடிநீர் தொட்டி 
‘சுத்திகரிப்பு’: பட்டியல் இனத்தவர் தொட்டதால்  
‘தீட்டு’ ஆனதாம்

பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீர் அருந்தினார் என்பதாக, குடிநீர் தொட்டியை கோமியத்தால் கழுவி சுத்திகரித்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் நடந்திருக்கும் இந்த சம்பவம் கேள்விப்படுவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் கிராமங்களில் ஒன்று ஹெகோதரா. இப்பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூரிலிருந்து வந்த பெண் ஒருவர், உள்ளூரின் பொது உபயோகத்துக்கான குடிநீர் தொட்டி ஒன்றில் தாகம் தீர்த்திருக்கிறார். முன்பின் அறிந்திராத பெண் குடிநீர் அருந்தியதை அங்கிருந்தவர்கள் பார்த்து விசாரித்திருக்கின்றனர். அதில் அப்பெண் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என தெரிய வந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொதித்துப் போனார்கள்.

ஏனெனில் அங்கே குடியிருப்போர் சாதி அடுக்கில் உயர்ந்தோராக தங்களை கருதிக் கொள்வோர். உயர் சாதி குடியிருப்பில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் பிரவேசித்ததும், பைப் தொட்டு நீர் அருந்தியதும் தீயாக பரவியது. ’கீழ் சாதி’ பெண் தொட்டதால் ’தீட்டாகிவிட்ட’ தொட்டியை சுத்தம் செய்வது எப்படி என உயர் சாதியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக தொட்டியில் நிறைந்திருந்த குடிநீர் முழுமைக்கும் திறந்துவிட்டு வீணாக்கினர். அதன் பிறகும் மனம் ஆறாது அடுத்தக்கட்ட யோசனைக்கு நகர்ந்தனர்.

சுத்தம் செய்யப்படும் குடிநீர் தொட்டி
சுத்தம் செய்யப்படும் குடிநீர் தொட்டி

அதன்படி தாங்கள் வளர்க்கும் கால்நடைகளிடமிருந்து அதன் சிறுநீரை சேகரித்து வந்தனர். அந்த கோமியத்தால் தொட்டி முழுமைக்கும் சுத்திகரிப்பு செய்தனர். அதன் பின்னர் தொட்டியில் நீரேற்றி, அதனை அருந்தி நிம்மதியடைந்தனர். தங்களது பெருமைக்குரிய இந்த அனுபவத்தை பக்கத்து ஊர்களின் இதர உயர்சாதியினருக்கும் தெரிவித்ததில், கிராமத்தில் அரங்கேறிய தீண்டாமை விவகாரம் மாவட்ட நிர்வாகத்தினருக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அப்பகுதியின் வட்டாட்சியர் பசவராஜ் ’தீண்டாமை காரணமாக தொட்டி சுத்தம் செய்யப்பட்டதை உறுதி செய்தார். ஆனால் கோமியம் உபயோகித்தது தொடர்பாக விசாரணை தொடர்கிறது’ என்கிறார். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான குடிநீர் தொட்டியின் குழாயை தொட்ட பட்டியலினப் பெண் யார், எங்கே போனார் என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர் கிடைத்தால் மட்டுமே மேற்படி சம்பவத்தின் தீண்டாமை கொடுமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

தற்காலத்தில் அதிகம் எழுப்பப்படும் கேள்விகளில் ஒன்றான ’இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா?’ என்பதற்கு இந்த கர்நாடக கிராமம் பதில் தந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in