வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது கர்நாடக அரசு!


வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது கர்நாடக அரசு!

பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நகரின் வெள்ளச் சூழலை சமாளிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில், குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் தலைமையில் நேற்று இரவு ஆசோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பிறகு பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, “மாநிலம் முழுவதும் மழை மற்றும் வெள்ளச் சூழலை சமாளிக்க ரூ.600 கோடி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. சாலைகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பள்ளிகள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்க பெங்களூருவுக்கு மட்டும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களின் துணை ஆணையர்களிடம் ஏற்கனவே ரூ.664 கோடி உள்ளது. உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தனியாக ₹ 500 கோடி ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் மழைநீர் வடிகால் அமைக்க மொத்தம் ₹ 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, வெள்ளம் குறைந்தவுடன் பணிகள் தொடங்கும்” என்றார்

மேலும், மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) மேலும் ஒரு நிறுவனத்தை பெங்களூருவிற்கு பிரத்யேகமாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், படகுகள் மற்றும் பிற உபகரணங்களுக்காக ₹ 9.50 கோடி விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 1 முதல் 5 ம் தேதி வரை பெங்களூருவின் சில பகுதிகளில் இயல்பை விட 150 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. மகாதேவபுரா, பொம்மனஹள்ளி மற்றும் கே ஆர் ​​புரம் மண்டலங்களில் இயல்பை விட 307 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூருவில் கடந்த 32 ஆண்டுகளில் பெய்த மிக அதிகமான மழை இதுவாகும். இதனால் நகரில் உள்ள 164 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in