பக்தர்களை அழைத்து வந்த பேருந்து ஓட்டுநர், இருக்கையிலேயே இறந்துபோன சோகம்!

பக்தர்களை அழைத்து வந்த பேருந்து ஓட்டுநர்,   இருக்கையிலேயே இறந்துபோன  சோகம்!

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழக கோயில்களுக்கு பக்தர்களை ஏற்றி வந்த  கர்நாடக அரசுப் பேருந்து ஓட்டுனர் சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வாசலில் பேருந்திலேயே  மரணமடைந்துள்ள சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகா மாநிலம், சாம்ராட் நகர் மாவட்டம், கொள்ளேகால் பகுதியில் வசித்து வந்தவர் சிவராஜ் (40). இவர், கர்நாடக மாநில அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு தனது பகுதியைச் சேர்ந்த 50 பேரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.

அவர்கள் தமிழகத்தில் உள்ள பிற  சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோயில்களைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்தனர். அதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்று இரவு வந்துள்ளனர். இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் சிவராஜ் பேருந்தில் வந்தவர்களை இறக்கிவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையில் தூங்கியுள்ளார்.

இன்று அதிகாலையில் பேருந்தில் ஏறியவர்கள் ஓட்டுநரை எழுப்பியிருக்கின்றனர். ஆனால், அவர் எழுந்திருக்காமல் இருந்ததால் அருகில் சென்று பார்த்துள்ளனர்.  அவர் மயக்கம் அடைந்த நிலையில்  இருந்திருக்கிறார். அதனால்  காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. அதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிவராஜின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. 

பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் இப்படி அகால மரணம் அடைந்திருப்பது அந்த பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in