கர்நாடகாவில் ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு அதிரடி தடை: என்ன காரணம் தெரியுமா?


கர்நாடகாவில் ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு அதிரடி தடை: என்ன காரணம் தெரியுமா?

அதிக கட்டணம் காரணமாக பெங்களுருவில் மூன்று சக்கர வாகன சேவைகளை நிறுத்துமாறு ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆகிய கால்டாக்சி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் 2 கி.மீ தொலைவிற்கு அதிகபட்சமாக ரூ.30 மட்டுமே கட்டணமாக வசூலிக்கவேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நிலையில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் 2 கி.மீ தூரத்துக்கு 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்த காரணத்தால் கர்நாடக அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பெங்களூரு போக்குவரத்துக்கான கூடுதல் ஆணையர் ஹேமந்த குமார், "ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களுக்கு டாக்ஸிகளை இயக்க மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது. ஆட்டோக்களை இயக்குவதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் இல்லை... அவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள், இது ஒரு தீவிர புகார். அதிகப்படியான கட்டணத்தை நியாயப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.

இதன் காரணமாக பெங்களூருவில் 3 நாட்களுக்குள் ஆட்டோ சேவையை நிறுத்துமாறு போக்குவரத்து துறை சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த நிறுவனங்கள் அதிக கட்டண புகார் தொடர்பாக விளக்கமளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. ஆனால் பெங்களூரில் தங்களது செயல்பாடுகள் சட்டவிரோதமானவை அல்ல என்றும் நோட்டீசுக்கு பதிலளிப்பதாகவும் ரேபிடோ தெரிவித்துள்ளது."எங்கள் அனைத்து கட்டணங்களும் மாநில அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட கட்டணங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் அந்த கட்டணத்தில் ரேபிடோ கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கவில்லை" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஆட்டோ சங்கங்கள் இணைந்து ‘நம்ம யாத்ரி’ எனும் ஆட்டோ சேவை ஆப்பினை விரைவில் தொடங்கவுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in