'கரிசல்' நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு: படைப்புலகில் கால்பதித்த பொன்னீலனின் பேத்தி!

பொன்னீலன்
பொன்னீலன் 'கரிசல்' நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு: படைப்புலகில் கால்பதித்த பொன்னீலனின் பேத்தி!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் சிறந்த நாவல்களில் ஒன்றான கரிசலை, 'பிளாக் சாய்ல்' (BLACK SOIL) என்னும் பெயரில் ஆங்கிலத்தில் அவரது பேத்தியும், மருத்துவருமான பிரியதர்ஷினி மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகம் திருவனந்தபுரத்தில் நாளை வெளியிடப்படுகிறது. பொன்னீலன் குடும்பத்தின் நான்காம் தலைமுறை படைப்பாளர் இவர் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னீலனுடன், பேத்தி பிரியதர்ஷினி
பொன்னீலனுடன், பேத்தி பிரியதர்ஷினிபடம்: ஜவஹர்ஜி

தமிழகத்தில் முற்போக்கு இலக்கியத்தின் முகமாக இருப்பவர் பொன்னீலன். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மிகப்பெரிய தூண்களில் ஒருவர். அவரது பயிற்சிப்பட்டறையில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். அதேபோல் இளைய தலைமுறையில் இருந்து யார் எழுத்துத் துறைக்கு வந்தாலும், ’வா ராசா..’ என உற்சாகம் ததும்பும் வார்த்தைகளால் தட்டிக்கொடுத்து, ஊக்குவித்து மகிழ்பவர் பொன்னீலன். வயதால் 85ஐ நெருங்கிவிட்டாலும் கூட இளம் தலைமுறையினர் அணிந்துரை என சென்று நின்றால் முகம் சுளிக்காமல் தன் எழுத்துகளால் அவர்களின் படைப்புகளுக்கு உயிர் கொடுப்பவர் பொன்னீலன்.

இப்போது அவரது படைப்பையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரது பேத்தி மருத்துவர் பிரியதர்ஷினி படைப்புலகில் கால் பதிக்கிறார். பொன்னீலனுக்கு அழகு நிலா, அனிதா என இருமகள்கள் உள்ளனர். இதில் அனிதா ஏற்கெனவே, ‘சாதியைப் பேசத் தான் வேண்டும்’ என்னும் பெயரில் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த வரிசையில் இப்போது அழகுநிலாவின் மகளும், பொன்னீலனின் பேத்தியுமான மருத்துவர் பிரியதர்ஷினி, பொன்னீலனின் 'கரிசல்' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் நாளை மாலை திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்கத்தில் வெளியிடப்படுகிறது. இதை எம்.பி சசிதரூர் வெளியிடுகிறார்.

இடதுசாரிக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும் தொனியிலும், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாய சங்கங்கள் அமைந்தவிதம் குறித்தும் 'கரிசல்' நாவல் 1976-ம் ஆண்டு வெளியானது. பொன்னீலனின் முதல் நாவலான இது, அவர் கோவில்பட்டி பகுதியில் ஆசிரியராக இருந்த காலக்கட்டத்தில் எழுதியது. 47 ஆண்டுகளுக்கு முன்பு, இந்நாவல் மொழிபெயர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொன்னீலனின் தாயான அழகிய நாயகி அம்மாளும், 'கவலை' என்ற நாவலை எழுதியிருந்தார். வீட்டில் எழுதிய காகித கோப்புகளாக இருந்த அவற்றை பொன்னீலனே நூல் வடிவாக்கினார். தொடர்ந்து பொன்னீலன் எழுத்துத்துறைக்கு வந்து சாகித்ய அகாடமி விருது பெற்றார். அவருக்குப் பின்பு அவரது மகள் அனிதா, அதற்குப் பின்பு இப்போது அவரது பேத்தி பிரியதர்ஷினியும் எழுத்துத்துறைக்குள் வந்துள்ளார். அந்தவகையில் பிரியதர்ஷினி, பொன்னீலன் வீட்டில் இருந்து வரும் நான்காம் தலைமுறை இலக்கிய முகம் எனலாம். அதனாலேயே இந்தப் படைப்பு மொழிபெயர்ப்பு இலக்கிய உலகிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in