
வன்முறையை தூண்டும் விதமாக பேசி வீடியோ வெளியிட்டதாக யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் மீது காரமடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பைக் ரைடு செய்து சாகசத்தில் ஈடுபட்டு வருவதுடன் அதனை வீடியோவாக பதிவு செய்து டி.டி.எப் என்ற தனது யூடியூப் சேனலில் அப்லோடு செய்து வருகிறார்.
இவருக்கு லட்சக்கணக்கில் பாலோவர்ஸ் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தினமும் புதுப்புது வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்து வரும் டி.டி.எப் வாசன் அவ்வப்போது காவல்துறைக்கு தலைவலியை ஏற்படுத்தும் சில பதிவுகளையும் பதிவிட்டு வழக்குகளையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் தற்போது யூடியூப் ஊடகலாவியர் ஜயப்பன் ராமசாமி மீது தாக்குதல் நடத்துவேன் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் வாசன். ஏற்கெனவே டி.டி.எப் வாசனுக்கும் தற்போது சர்ச்சையில் சிக்கிய ஜயப்பன் ராமசாமிக்கும் சில கருத்து மோதல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜயப்பன் ராமசாமி தான் பேசுவதற்கு பணம், பொருட்கள் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், அது குறித்து டி.டி.எப் வாசன் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி ஜயப்பன் ராமசாமியை கடுமையாக விமர்சித்த வாசன், நீ மட்டும் என் கையில் கிடைத்தால் உன் மூஞ்சிய உடைப்பேன், உன்னை எங்கு பார்த்தாலும் விட மாட்டேன் என அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார். இதனையடுத்து தற்போது காரமடை போலீசார் டி.டி.எப் வாசன் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.