திருமண ஆசைகாட்டி விதவைப்பெண்ணிடம் பலமுறை தனிமை: 4 பெண்களை ஏமாற்றிய காவலர் சிக்கினார்

குணசேகரன்
குணசேகரன்திருமண ஆசைகாட்டி விதவைப்பெண்ணிடம் பலமுறை தனிமை: 4 பெண்களை ஏமாற்றிய காவலர் சிக்கினார்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், விதவைப் பெண்ணிடம்  திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஏமாற்றிய காவலர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா(39). தனது கணவர் இறந்துவிட்ட நிலையில்  இரண்டு குழந்தைகளை வளர்க்க  திருநள்ளாறில்  காய்கறி கடையில்  வேலைசெய்து  பிழைப்பு நடத்தி வருகிறார். அந்த கடையின் ரெகுலர் கஸ்டமர் செருமாவிலங்கை பகுதியை சேர்ந்த  குணசேகரன்(42). இவர் காரைக்கால் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

அடிக்கடி கடைக்கு வந்ததனால் சுதாவுக்கும் அவருக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அது சில நாட்களில் இன்னும் நெருக்கமானது. சுதா விதவை என்பதை தெரிந்து கொண்ட குணசேகரன் தானும் திருமணமாகி விவாகரத்து ஆனவன் தான்  என்று சொல்லி சுதாவிடம் பரிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதன்பின் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றும் கேட்டுள்ளார். 

கணவனை இழந்து வாழும் தனக்கு காவலர் கணவனாக வந்தால் எதிர்காலம் இனிக்குமே என்ற நம்பிக்கையில் அதற்கு சுதாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதனால் இருவரும் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.  சுதாவுடன் காவலர் குணசேகரன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் சுதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி குணசேகரனிடம் வலியுறுத்தி உள்ளார். அதற்கு தான் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும், அந்த கடனை அடைத்து விட்டால் அதன்பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று குணசேகரன் கூறியுள்ளார். 

அதனை நம்பிய சுதா, தனது 7 சவரன் தங்க நகையை அடமானம் வைத்தும், சுய உதவிக்குழு மற்றும் வங்கிகள் மூலம் கடன் பெற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை குணசேகரனிடம் கொடுத்தார். கடனை அடைத்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஆசையோடு காத்திருந்த சுதாவுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது.

திருமணம் செய்துகொள்ள முடியாது என்று குணசேகரன் மறுத்து வந்திருக்கிறார். மேலும் சுதா  திருமணம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தியபோது கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுதா திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த திருநள்ளாறு காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வன், காவலர் குணசேகரனை  நேற்று  கைது செய்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இதேபோல் 4 பெண்களிடம் காவலர் குணசேகரன் பழகி, பணம் ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.  அதுமட்டுமில்லாமல் தன்னை தப்பிக்க விட்டால், 50 ஆயிரம் லஞ்சம் தருவதாக திருநள்ளாறு போலீஸாரிடம் குணசேகரன் பேரம் பேசியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in