உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்கள்: காரைக்கால் மாணவர் உயிரிழப்பில் முதல்வர் ரங்கசாமி அதிரடி

காரைக்கால் அரசு மருத்துவமனை
காரைக்கால் அரசு மருத்துவமனை

விஷம் கொடுக்கப்பட்ட பள்ளி மாணவனுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கத் தவறிய இரண்டு மருத்துவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்காலில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பால மணிகண்டன், கூடப் படிக்கும் மாணவி ஒருவரின் தாயார் கொடுத்த விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் உடல் நலம் குறைபாடு ஏற்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு 24 மணி நேரத்திற்கு மேலாக மாணவன் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். ஆனாலும் பயன் இல்லாமல் திடீரென மாணவர் இறந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சிய போக்காலேயே மாணவன் உயிரிழந்ததாக பெற்றோர் உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ், பாலசந்திரர் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை புதுச்சேரி அரசு அமைத்தது. இந்தக்குழு மருத்துவமனையில் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை நேற்று மருத்துவத்துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்டது எந்த வகையான விஷம் என தெரியவில்லை என்றும், தெரிந்திருந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளித்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியாததால் வாந்தி மற்றும் வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பேரில் முதல்வர் ரங்கசாமி, மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவறிய காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விஜயகுமார் மற்றும் பாலாஜி ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து இன்று காரைக்காலில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ரங்கசாமி மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in