இரும்பு ராடால் தாக்கி மீன்கள் கொள்ளை; நடுக்கடலில் கதறிய தமிழக மீனவர்கள்: இலங்கை கடற்படை அட்டூழியம்

மருத்துவமனையில் சிகிச்சை தரும் மீனவர்கள்
மருத்துவமனையில் சிகிச்சை தரும் மீனவர்கள்

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை கடுமையாக தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்குமார் (43) என்பவரின் விசைப்படகில், கடந்த 2-ம் தேதியன்று அவருடன் 15 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில் மீனவர்களை சுற்றிவளைத்தனர்.

அருகே வந்த அவர்கள், மீனவர்களின் படகில் குதித்து அதிலிருந்த விலை உயர்ந்த மீன்களை தங்களின் படகுக்கு மாற்றினர். அதை காரைக்கால் மீனவர்கள் தடுத்தனர். அதனையடுத்து மீன் அள்ளப் பயன்படுத்தும் சவுள், இரும்பு ராடு, ரப்பர் குழாய் ஆகியவற்றைக் கொண்டு காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொண்டு கடுமையாகத் தாக்கினர். இந்த தாக்குதலில் ராஜ்குமார் உட்பட பெரும்பாலான மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர். வலி தாங்காமல் கதறிய மீனவர்களையும் கண்டு கொள்ளாமல் மீனவர்களின் படகிலிருந்து விலையுயர்ந்த மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ர5 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து காரைக்கால்மேடு மீனவ பஞ்சாயத்தாருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் மீனவர்கள் கடலில் இருந்தே தகவல் தந்தனர். அதையடுத்து காரைக்கால் துறைமுகத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சகிதமாக அவர்களது உறவினர்கள் காத்திருந்தனர். மீனவர்கள் துறைமுகத்தை அடைந்ததும் அவர்களை கொண்டுசென்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாரின் உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மற்ற மீனவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை கடற்படையால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், இப்படி கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in